துபாய் மோட்டார் ஷோவில் டபிள்யூ மோட்டார்ஸின் புதிய ஃபெனிர் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!
துபாய் மோட்டார் ஷோவில் லெபனான் நாட்டை சேர்ந்த டபிள்யூ மோட்டார்ஸ் தனது இரண்டாவது சூப்பர் ஸ்போர்ட் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.
ஏற்கனவே, லைக்கன் என்ற ஹைப்பர் ஸ்போர்ட் கார் மாடல் மூலமாக பிரபலமான இந்த அரபு நாட்டு நிறுவனம் இரண்டாவது மாடலாக ஃபெனிர் என்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய காரின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்பெஷல் மாடல்
மொத்தமாக 7 லைக்கன் ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களை விற்பனை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது, ஆண்டுக்கு 25 ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட் கார்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய உள்ளதாக டபிள்யூ மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எஞ்சின்
புதிய ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட் காரில் 4.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 900 பிஎச்பி பவரையும், 1,200 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் ஆற்றல் பின் சக்கரங்களுக்கு வழங்கப்படுகிறது. போர்ஷே நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

செயல்திறன்
இந்த ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட் ரக கார் அதிகபட்சமாக 400 கிமீ வேகத்துக்கும் அதிகமாக தொட்டுவிடும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் தொட்டுவிடும். எனவே, இது புகாட்டி வேரான் காருக்கு இணையான வல்லமை கொண்டதாக கூறலாம்.

முக்கிய அம்சங்கள்
அலுமினிய சேஸீ, கார்பன் ஃபைபர் பாடி மற்றும் செராமிக் காம்போசிட் பிரேக்குகள் கொண்ட இந்த சூப்பர் ஸ்போர்ட் கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விலை
லைக்கன் ஹைப்பர் ஸ்போர்ட் காரை 3.4 மில்லியன் டாலர் விலையில் வெளியிட்ட டபிள்யூ மோட்டார்ஸ், அதைவிட பாதி விலையில், இந்த புதிய ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட் காரை வெளியிட்டிருக்கிறது. ஆம், 1.85 மில்லியன் டாலர்கள் விலையில் இந்த புதிய ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட் கார் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








