ஃபியட் புன்ட்டோ அபார்த் மற்றும் அவென்ச்சுரா அபார்த் கார்கள் விற்பனைக்கு வந்தது!
இந்தியாவில், அபார்த் பிராண்டில் இரண்டு புதிய கார் மாடல்களை ஃபியட் நிறுவனம் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புன்ட்டோ அபார்த் காருடன் சேர்த்து, மற்றொரு மாடலாக அவென்ச்சுரா அபார்த் காரும் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, அபார்த் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரு மாடல்களும் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். அதிசக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய இந்த கார்கள் பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை வசீகரிக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் அம்சங்கள்
புன்ட்டோ அபார்த் காரில் 16 இன்ச் அலாய் வீல்கள், அபார்த் பிராண்டின் தேள் வடிவிலான பேட்ஜ்கள், ஆங்காங்க கூடுதல் வண்ணத்திலான அலங்காரங்கள் என சாதாரண புன்ட்டோ எவோ காரிலிருந்து வெளிப்புறம் வேறுபாடு காண்பிக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், கான்ட்ராஸ்ட் தையல்கள், லெதர் கவர் போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், கருப்பு வண்ண டேஷ்போர்டு, அலுமினிய பெடல்கள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை குறிப்பிட்டு கூறும்படியான அம்சங்கள்.

புன்ட்டோ அபார்த் எஞ்சின்
இன்று வந்திருக்கும் இரு மாடல்களிலும் 1.4 லிட்டர் டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பவர் வெளிப்படுத்தும் திறனில் வேறுபடுகிறது. புன்ட்டோ அபார்த் காரில் இருக்கும் 1.4 லிட்டர் டி- ஜெட் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 145 எச்பி பவரையும், 212 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. 0- 100 கிமீ வேகத்தை 8.8 வினாடிகளில் எட்டிவிடும். லிட்டருக்கு 16.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபார்த் அவென்ச்சுரா மாடலின் விபரங்கள் மற்றும் விலை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

அபாரத் அவென்ச்சுரா எஞ்சின்
புன்ட்டோ அபார்த் காரில் இருக்கும் அதே எஞ்சின்தான். ஆனால், அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 210 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.9 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரியான அளவில் செலுத்தும் இபிடி., நுட்பம், டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரவில் காரை நிறுத்திய பின்னரும் சிறிது நேரம் வெளிச்சத்தை தரும் ஹெட்லைட்டுகள், தீ பிடிப்பதை தடுக்கும் தொழி்லநுட்பம் ஆகியவை முக்கியமானவை.

வண்ணங்கள்
புன்ட்டோ அபார்த் கார் பியர்ல் ஒயிட் என்ற வெள்ளை நிறத்திலும், ஹிப் ஹாப் பிளாக் என்ற கருப்பு நிறத்திலும் கிடைக்கும். அதேபோன்று, அபார்த் அவென்ச்சுரா காரும்,பியர்ல் ஒயிட் என்ற வெள்ளை நிறத்திலும், எக்ஸோடிக்கா ரெட் என்ற சிவப்பு வண்ணத்திலும் கிடைக்கும்.

விலை விபரம்
அபார்த் புன்ட்டோ எவோ மற்றும் அபார்த் அவென்ச்சுரா ஆகிய இரு மாடல்களும் ரூ.9.95 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








