காரின் எந்தெந்த பாகங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகாது தெரியுமா?
கார் வாங்குவதற்கு பலர் ஆர்வமாக இருந்தாலும், அதற்கான பராமரிப்பு செலவீனங்கள்தான் பலரை தயங்க வைக்கும் விஷயம். இந்தநிலையில், விபத்து அல்லது வேறு காரணங்களால் காருக்கு பாதிப்பு ஏற்படும்போது அதனை சரி செய்வதற்கான செலவீனம் மிக அதிகம்.
இதற்காக, தற்போது பல வகையான கார் இன்ஸ்யூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. அதில், பம்பர் டு பம்பர் எனப்படும் காரின் முழுமைக்குமான இன்ஸ்யூரன்ஸ் திட்டமும் ஒன்று. ஆனால், பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸை தேர்வு செய்து விட்டால், கார் எந்தவிதமான சேதமடைந்தாலும், பிரச்னை இல்லை என்று நினைத்து பலர் தேர்வு செய்துகின்றனர்.
அதுதான் இல்லை. அனைத்து கார் பாகங்களுக்கும் எந்தவொரு இன்ஸ்யூரன்ஸ் திட்டமும் இழப்பீடு வழங்குவதில்லை என்பதே உண்மை. அதிகபட்சமாக கருதப்படும் பம்பர் டு பம்பர் அல்லது ஸீரோ டெப்ரிசியேஷன் என்று அழைக்கப்படும் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் கூட அனைத்து பாகங்களுக்கும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியாது. அவை எந்தெந்த பாகங்கள் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ்
ஸீரோ டெப்ரிசியேஷன் அல்லது பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் தேய்மான மதிப்பு கணக்கில்கொள்ளப்படாமல், இழப்பீடு வழங்கப்படும். அதாவது, பாகங்களின் விலையில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் மட்டுமே கழித்துக் கொண்டு இழப்பீடு கொடுத்துவிடுவர். ஆனால், பிற இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களில் 50 சதவீதம் வரை தேய்மான மதிப்பு கணக்கிடப்படும். ஆனாலும், அனைத்து பாகங்களுக்கும் இந்த விதி பொருந்தாது.

டயர், பேட்டரி
பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் பேட்டரி, டயர்களுக்கு இழப்பீடு பெற இயலாது. இவை இன்ஸ்யூரன்ஸ் திட்ட வரம்புக்குள் வராத பாகங்களாக இருக்கின்றன.

எஞ்சின்
எஞ்சின் பாகங்களுக்கும் இந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் இழப்பீடு கோர முடியாது. எஞ்சினில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சொந்த செலவிலேயே சரிசெய்து கொள்ள வேண்டியிருக்கும்.

இதர பாகங்கள்
கிளட்ச் பிளேட், பிரிக்ஷன் டிஸ்க், ஆக்சிஜன் சென்சார், எஞ்சின் மவுண்ட், பேரிங்குகள் போன்றவையும் எந்தவொரு இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தின் மூலமாக இழப்பீடு கோர முடியாது என்பதை நினைவில் வைக்க வேண்டியது அவசியம்.

எஞ்சின் செயலிழந்தால்...
கார் எஞ்சினில் தண்ணீர் புகுந்து ஹைட்ரோலாக் எனப்படும் எஞ்சின் செயலிழப்பு ஆவதற்கும், பிற பிரச்னைகாளால் எஞ்சின் சீஸ் ஆனாலும் இன்ஸ்யூரன்ஸ் மூலமாக இழப்பீடு கோர முடியாது.

குடிபோதை டிரைவிங்
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதற்கும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் இழப்பீடு கோர முடியாது. சுயநல நோக்கோடு ஏற்படுத்தப்படும் விபத்துக்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டும்போது விபத்தில் சிக்குவது போன்ற சமயங்களில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோர முடியாது. ஒவ்வொரு முறையும் இழப்பீடு கோரும்போது ரூ.1,000 பிடித்தம் செய்துகொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஆட்-ஆன்' திட்டங்கள்
காம்பரிஹென்சிவ் வாகன இன்ஸ்யூரன்ஸ் திட்டத்தில் கூடுதலாக எஞ்சின் புரொடெக்டர் திட்டம், விபத்தில் சிக்கும்போது ஏற்படும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட கூடுதல் திட்டங்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் எஞ்சின் பாதிப்பு மற்றும் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான மருத்துவ செலவுகளை இழப்பீடாக பெற வழி வகை உள்ளது. எனவே, உங்களுக்கு தேவையான ஆட் ஆன் திட்டங்களையும் இன்ஸ்யூரன்ஸ் எடுக்கும்போது சேர்த்து எடுத்தால், அவசர சமயங்களில் உதவும்.


Click it and Unblock the Notifications








