வால்வோவுக்கு போட்டியாக வரும் ஜேபிஎம் சிட்டி பஸ் மாடல்கள்!
வால்வோ நிறுவனத்தின் சிட்டி பஸ்களுக்கு போட்டியாக புதிய சொகுசு பஸ் மாடலை ஜேபிஎம் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் பிரபலமான ஜேபிஎம் நிறுவனம், பஸ் தயாரிப்பில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சிட்டி பஸ் மாடலை அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. இத்தாலிய தொழில்நுட்ப கலவையில் உருவாகும் இந்த புதிய பஸ் மாடல்கள் விரைவில் மார்க்கெட்டுக்கு வர இருக்கின்றன.
சிட்டிலைஃப் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் ஜேபிஎம் நிறுவனத்தின் சிட்டி பஸ், வால்வோ பஸ்களைவிட 10 சதவீதம் குறைவான விலையில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும்.
ஜேபிஎம் சிட்டிலைஃப் பஸ் மாடல் ஒரு டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும், இரண்டுவிதமான சிஎன்ஜி எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர, நகரங்களுக்கு இடையில் இயக்குவதற்கான சொகுசு பஸ் மாடல்களையும் ஜேபிஎம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த பஸ் மாடல்கள் வால்வோ, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஸ்கானியா சொகுசு பஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஹரியானா மாநிலம், பரீதாபாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள கோஸி ஆகிய இடங்களில் உள்ள ஜேபிஎம் ஆலைகளில் இந்த புதிய பஸ் மாடல்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications









