சாங்யாங், பீஜோ வரிசையில் பினின்ஃபரீனாவை கையகப்படுத்தும் மஹிந்திரா!
உலக அளவில் பிரபலமான கார் நிறுவனங்கள் அல்லது ஆட்டோமொபைல் நிறுவனங்களை கைகொடுத்து தூக்கி விடுவதில், இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற தென்கொரிய நிறுவனமான சாங்யாங் மோட்டார்சை சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா கையகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ நிறுவனத்தின் இருசக்கர வாகன தயாரிப்புப் பிரிவையும் அந்த நிறுவனம் வாங்கியது. அடுத்து, இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தையும் வாங்க முயற்சித்தது. அது பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற கார் வடிவமைப்பு நிறுவனமான பினின்ஃபரீனாவை மஹிந்திரா கையகப்படுத்த உள்ளது. இந்த மாத இறுதியில் இந்த டீல் முடிந்துவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆமாம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மஹிந்திரா கைப்பற்ற இருக்கும் பினின்ஃபரீனா நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டி என்னென்ன என்பதை ஸ்லைடரில் காண்போம்.

கலக்கல் டிசைன்
ஃபெராரி நிறுவனத்தின் பல பிரபல கார் மாடல்களை வடிவமைத்து கொடுத்த நிறுவனம்தான் பினின்ஃபரீனா. ஃபெராரி மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ, அஸ்டன் மார்ட்டின், ஆலஃபா ரோமியோ, ஹோண்டா, மஸராட்டி, ஃபியட் உள்ளிட்ட பல பிரபல கார் பிராண்டுகளின் சில முன்னணி மாடல்களை இந்த நிறுவனம் வடிவமைத்து கொடுத்திருப்பதுடன், சில ஸ்டாக் மாடல்களை கஸ்டமைஸ் செய்தும் அசத்தியிருக்கிறது.

ஸ்தாபிதம்
1930ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த பேட்டிஸ்டா பினின்ஃபரீனா என்பவரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. கார் டிசைன் மற்றும் கஸ்டமைஸ் வாகனங்களை கட்டித் தரும் பணிகளை இந்த நிறுவனம் செய்து கொடுத்தது.

கார் மட்டும்தானா...
பிரபல நிறுவனங்களின் ஆஸ்தான டிசைனராக மட்டுமின்றி, அதிவேக ரயில், டிராம் ரயில், ஆடம்பர படகுகள், விமானங்கள், தனிநபர் பயன்பாட்டு விமானங்களை வடிவமைத்தும், கஸ்டமைஸ் செய்தும் கொடுத்து மிகவும் புகழ்பெற்றது.

செர்ஜியோ பினின்ஃபரீனா
பேட்டிஸ்டா பினின்ஃபரீனாவை தொடர்ந்து, அவரது மகன் செர்ஜியோ பினின்ஃபரீனாதான் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். ஃபெராரி நிறுவனர் என்ஸோ ஃபெராரியுடன் இணைந்து மிட் எஞ்சின் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்தியவர். ஃபெராரி நிறுவனத்தின் 360, 328 மற்றும் ஃபெராரி எஃப்40 போன்ற பிரபல கார்களின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர். அது மட்டுமா...

செர்ஜியோ கான்செப்ட் மாடல்...
கடந்த 2005ம் ஆண்டு இத்தாலி குடியரசு அதிகார சபையின் ஆயுட்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2012ம் ஆண்டு தனது 85வது வயதில் காலமானார். இவரது நினைவாக, கடந்த ஆண்டு செர்ஜியோ கான்செப்ட் கார் மாடலை ஜெனிவா மோட்டார் ஷோவில் பினின்ஃபரீனா காட்சிக்கு வைத்திருந்தது நினைவிருக்கலாம்.

நிதி நெருக்கடி
2008ம் ஆண்டு பினின்ஃபரீனா நிறுவனம் கடன் சுமையில் சிக்கியது. வங்கிகளில் பெறப்பட்ட கடன் சுமையை குறைப்பதற்காக, பினின்ஃபரீனா குடும்பத்தினர் தங்கள் வசம் உள்ள பெரும்பான்மையான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர். தகுதிவாய்ந்த முதலீட்டாளரை தேர்வு செய்வதற்காக, 2012ல் லியானார்டோ அண்ட் கோ என்ற நிறுவனத்தை நியமித்தது.

மஹிந்திரா முயற்சி
பினின்ஃபரீனா நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீண்போகின. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதால், மீண்டும் தகுதிவாய்ந்த முதலீட்டாளரை தேடும் பணியில் அந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. இதையடுத்து, முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பினின்ஃபரீனாவை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டது. அதில், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான நடைமுறைகள் இந்த மாதத்திற்குள் முடிந்து பினின்ஃபரீனாவின் பெரும்பான்மை பங்குகள் மஹிந்திரா வசம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால திட்டம்
உலகின் பல முன்னணி நிறுவனங்களின் உயர்வகை கார்களை வடிவமைத்து கொடுத்த பினின்ஃபரீனாவை கையகப்படுத்துவதன் மூலம், தனது எதிர்கால மாடல்களை உருவாக்குவதிலும், டிசைன் செய்வதிலும் பினின்ஃபரீனாவின் நேரடி ஒத்துழைப்பை மஹிந்திரா பெற முடியும். இதன்மூலம், எஸ்யூவி மட்டுமின்றி, உயர்வகை கார்கள் தயாரிப்பிலும் மஹிந்திரா களமிறங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.


Click it and Unblock the Notifications








