மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்
வரும் 15ந் தேதி மாருதி எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தோற்றத்தில் சிறிய மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் வருவதோடு, ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் ஹைபிரிட் மாடலிலும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், திடீரென மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

டிசைன் மாற்றம்
மறுவடிவமைப்பு பெற்ற முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், புதிய முப்பட்டை க்ரோம் க்ரில் போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும். காரின் ஒட்டுமொத்த வடிவத்திலும், தோற்றத்திலும் மாறுதல்கள் பெரிய அளவில் இருக்காது.

புதிய வசதிகள்
சாவியுடன் அருகில் வந்தால், கார் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் கீ லெஸ் என்ட்ரி வசதியும், ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதியும் சேர்க்கப்பட இருக்கிறது. அதுதவிர, ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபோல்டிங் சைடு மிரர்கள், புதிய அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் மாருதி எர்டிகா காரை மேம்படுத்தப்பட்ட மாடலாக தரம் உயர்த்தும்.

ஏஎம்டி கியர்பாக்ஸ்
முதல்முறையாக இந்திய எம்பிவி கார் செக்மென்ட்டில் மாருதி எர்டிகா கார் ஏஎம்டி எனப்படும் புதிய வகை தானியங்கி கியர் ஷிஃப்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய கியர்பாக்ஸ் கொண்ட மாடலாக வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நகர்ப்புற வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம்
மாருதி சியாஸ் காருக்கு அடுத்ததாக, மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்மார்ட் ஹைபிரிட் சிஸ்டம் என்ற அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் புதிய தொழில்நுட்ப வசதியுடன் வருகிறது. ஆனால், இந்த ஹைபிரிட் சிஸ்டம் எர்டிகா காரின் டீசல் மாடலில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்
மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃபட் மாடலின் விலை குறைவான பேஸ் வேரியண்ட்டில் கூட ஓட்டுனருக்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு வசதியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேஸ் மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருக்காது என்று தெரிகிறது. இது ஏமாற்றமான விஷயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








