சொகுசு அம்சங்களின் உச்சம்... மெர்சிடிஸ் மேபக் புல்மேன் கார் அறிமுகம்!
உலகிலேயே மிக சொகுசான கார் வரிசையில் ஒன்றாக மெர்சிடிஸ்- மேபக் புல்மேன் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு வசதிகளின் உச்சத்தை தொடும் வகையில், டிசைனும், வசதிகளையும் அளிக்க வல்லதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனீவா மோட்டார் ஷோவில் தரிசனத்துக்கு தயாராகி இருக்கும் இந்த மாடல் லிமோ ரக மாடலாக கோடீஸ்வரர்களை வசீகரிக்க வருகிறது.
மெர்சிடிஸ்- மேபக் 600 காருக்கு அடுத்ததாக மெர்சிடிஸ் - மேபக் பிராண்டில் இரண்டாவது மாடலாக சேர்ந்துள்ளது இந்த புதிய ஆடம்பர கார். மெர்சிடிஸ் - மேபக் 600 காரைவிட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை தாங்கி வந்திருக்கும் உலகின் மிக மிக சொகுசான கார் மாடலின் விபரங்களை நீங்கள் இப்போது ஸ்லைடரில் காணப் போகிறீர்கள்.

லிமோ வடிவம்
மெர்சிடிஸ்- மேபக் 600 காரின் நீட்டிக்கப்பட்ட சேஸீ கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் மாடல் 21.3 அடி நீளம் கொண்டது. அதாவது, மெர்சிடிஸ் -மேபக் 600 காரைவிட 3.5 அடி கூடுதல் நீளம் கொண்டது. இரண்டு சக்கரங்களுக்கும் இடையில் 14.5 அடி இடைவெளி இருப்பதால் மிகச்சிறப்பான கேபின் வசதி கொண்டதாக வடிவமைத்துள்ளனர். இந்த கார் 5.3 அடி உயரம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

இருக்கை வசதி
பின்புறத்தில் முன்னோக்கி இருக்கும் இருக்கைகள் கூடுதல் சொகுசு வசதிகள் கொண்டது. அதற்கு எதிரே பின்னோக்கி இருக்கும் இரு இருக்கைகள் உதவியாளர்களுக்கானதாக குறைவான வசதிகள் கொண்டதாக இருக்கும். இருப்பினும், வர்த்தக ஆலோசனைகளுக்கும் ஏற்றதாக எதிரெதிர் திசைகளில் 4 இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்
இந்த கனரக கார் மாடலில் 523 எச்பி சக்தியையும், 830 என்எம் டார்க்கையும் வழங்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்
சாய்மான வசதியை அளிக்கும் இருக்கைகள், பர்ம்ஸ்டெர் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 18.5 இஞ்ச் திரை, லெதர் இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் இருக்கிறது.

குண்டுதுளைக்காத மாடல்
இந்த கார் சாதாரண மற்றும் குண்டு துளைக்காத பாதுகாப்பு வசதி கொண்ட கட்டமைப்பு கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

விலை
அடுத்த ஆண்டு முதல் இந்த காரின் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. இந்த காரின் பேஸ் மாடல் 5.67 லட்சம் டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








