இந்தியாவுக்கு புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி உறுதியானது...!!
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய பிரிமியம் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எஸ்யூவி வகை கார்கள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், அளித்து வரும் வரவேற்பையும் கருத்தில்கொண்டு இந்த புதிய டிகுவான் எஸ்யூவி மாடலை களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பிளாட்ஃபார்ம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி., பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இரண்டாம் தலைமுறை டிகுவான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய தலைமுறை போலோ, பஸாத் மற்றும் ஸ்கோடா கார்கள் இந்த புதிய பிளாட்ஃபார்மிலிருந்துதான் வடிவமைக்கப்படுகின்றன.

எஞ்சின் விபரம்
இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஞ்சின் சர்வதேச மார்க்கெட்டில் 150பிஎஸ், 190பிஎஸ் மற்றும் 240 பிஎஸ் என மூன்றுவிதமான பவரை அளிக்கும் மாடல்களில் வருகிறது. இதில், ஒரேயொரு மாடல் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்
இந்த எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களில் வெளியிடப்படும். அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவரை அனுப்பும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் வருகிறது. இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இருக்கை அமைப்பு
தற்போதைய தலைமுறை மாடல் 5 பேர் அமர்ந்து பயணிக்கும் இருக்கை அமைப்பு கொண்டது. ஆனால், புதிய தலைமுறை மாடல் 7 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக வெளியிடப்பட உள்ளது.

அறிமுகம் எப்போது?
அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை
இந்தியாவில் ரூ.30 லட்சத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஹூண்டாய் சான்டாஃ பீ ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்காது. விலை அடிப்படையில் ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் பெனஸ் ஜிஎல்ஏ போன்ற மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








