டெல்லியில் டீசல் வாகனங்களை பதிவு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை
டெல்லியில், டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
டெல்லியில், வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் வெகுவாக உயர்ந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசுபாடு வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்குகள் ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றன.

இதற்காக, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் எடுத்து வருகிறது. மேலும், ஒற்றைப்படை எண்கள் மற்றும் இரட்டைப்படை பதிவு எண்கள் அடிப்படையில் கார்களை சாலைகளில் அனுமதிப்பதற்கு டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, ஒருபுறம் எதிர்ப்பு இருந்து வந்தாலும், இந்த திட்டத்தை அமல்படுத்த டெல்லியில் ஆளும் கேஜ்ரிவால் அரசு முனைப்புடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, வரும் ஜனவரி 6ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை புதிய டீசல் வாகனங்களை டெல்லியில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த தடையால் டெல்லியில் சுமார் 12,000 டீசல் கார்களின் விற்பனை பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்து கார் நிறுவனங்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. டீசல் கார்களுக்காக கார் நிறுவனங்கள் பெரிய அளவிலான முதலீடுகளை செய்திருக்கும் நிலையில், இந்த தீர்ப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கார் ஆலைகளில் பணியாற்றும் பணியாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது என்று கார் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.
நாட்டின் கார் விற்பனையில் தலைநகர் டெல்லியின் பங்களிப்பாக 7 சதவீதமாக உள்ளது. அதில், 30 சதவீதம் வரை டீசல் கார்களின் பங்களிப்பாக உள்ளது. இந்த நிலையில், இந்த தடை காரணமாக கார் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு, வாடிக்கையாளர்களுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கார் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








