இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர்!
மிகவும் பிரத்யேகமான அம்சங்கள் கொண்ட லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வடிவமைப்பு பிரிவு உருவாக்கியிருக்கும் முதல் மாடல் என்ற பெருமைக்குரிய இந்த எஸ்யூவி, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி எம்எல் 63 மற்றும் போர்ஷே கேயென் டர்போ எஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

டிசைன்
சாதாரண மாடலிலிருந்து இதனை வேறுபடுத்தும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புதிய பம்பர், பெரிய ஏர் இன்டேக்குகள், புதிய க்ரில் அமைப்பு, புஷ்டியான வீல் ஆர்ச்சுகள், ஏர் டிபியூசருடன் புதிய பின்புற பம்பர், 4 புகைப்போக்கி குழாய்கள், பின்புற ஸ்பாய்லர் ஆகியவை கூடுதல் அம்சங்கள்.

இன்டிரியர்
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடலில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 4 விதமான உட்புற வண்ணத்தில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

எஞ்சின்
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் மாடலில் 542 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை 4 சக்கரங்களுக்கும் கடத்துகிறது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 261 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
அவசர கால பிரேக் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், வளைவுகளில் கார் கவிழ்வதை தவிர்க்கும் ஆக்டிவ் ரோல் கன்ட்ரோல், சாலைகளுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும் அடாப்டிவ் டேம்பர்களுடன் கூடிய ஏர் சஸ்பென்ஷன், ஏர்பேக்குகள் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் நிறைவாக பெற்றிருக்கிறது.

விலை
ரூ.2.12 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

எஸ்விஆர்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி பிராண்டில் பெர்ஃபார்மென்ஸ் கார்களை தயாரிப்பது போன்றே, ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனமும் இனி SVR பிராண்டில் சிறப்பு அம்சங்களுடன் கார்களை வெளியிடும். அதில், முதலாவதாக வந்திருக்கும் மாடல்தான் இந்த ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








