2015ல் மாருதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கார் மாடல்கள்!
எந்த விஷயத்திலும் முதலிடத்தில் இருப்பது நெருக்கடியான விஷயம்தான். அதில், மாருதி கார் நிறுவனமும் விதி விலக்கு அல்ல. நாட்டின் கார் விற்பனையில் பாதியளவு கையில் வைத்திருக்கும் மாருதிக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.
புதிய கார் நிறுவனங்களின் வருகையும், புதிய செக்மென்ட்டுகளில் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் மாருதிக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மாருதி நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடியை தந்திருக்கும், அல்லது தரப்போகும் கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

10.ஹூண்டாய் எலைட் ஐ20
மாருதியின் அதிகம் விற்பனையாகும் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்கள் பெரிய அளவில் டிசைன் மாற்றங்களை பெறாத நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டிசைனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மாருதியை நற நறக்க வைத்திருக்கிறது. இந்த புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் விற்பனையும் கடந்த மாதம் 10,000 கார்கள் என்ற எண்ணிக்கையை பதிவு செய்தது. இந்த எண்ணிக்கை மாருதிக்கு நெருக்கடியை தரும் விஷயமே.

09. நியூ ஃபோர்டு ஃபிகோ
இந்த ஆண்டு புதிய ஃபோர்டு ஃபிகோ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஃபிகோ பிராண்டுக்கு ஏற்கனவே ஓர் நன்மதிப்பு இருப்பதால் புதிய மாடலுக்கும் அந்த வரவேற்பு தொடரும் என நம்பலாம். இந்த காரும் மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனையில் சிறிது பங்களிப்பை எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

08. ஹோண்டா ஜாஸ்
பி+ எனப்படும் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் இதுவரை மாருதிக்கு மாடல் இல்லை. ஸ்விஃப்ட்டை வைத்து சமாளித்து வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது. புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டிசைன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் எஞ்சின் ஆகியவை மாருதிக்கு நெருக்கடியான மாடல்களாகவே தொடரும்.

07. ஃபோர்டு ஆஸ்பயர்
மாருதி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எதிர்பார்த்து போன்று டிசைனில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் ஃபோர்டு நிறுவனம் ஆஸ்பயர் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய மாடல் வரும்போது அது நிச்சயமாக டிசையர் விற்பனையில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளும்.

06. ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்
ஹேட்ச்பேக் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் செக்மென்ட்டில் ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் ஐ20 ஆக்டிவ் காரை அறிமுகம் செய்தது. இந்த செக்மென்ட்டில் மாருதிக்கு இதுவரை கார் மாடல்களே இல்லை. விற்பனை எண்ணிக்கை பெரிய அளவில் இல்லையெனினும், இந்த செக்மென்ட்டில் மாடல் இல்லை என்பதால் குறிப்பிட்ட அளவிலான விற்பனையை மாருதி இழந்து வருகிறது.

05.டாடா நானோ ஏஎம்டி
நானோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டாடா மோட்டார்ஸ். மிக குறைவான விலையிலான ஏஎம்டி மாடல் என்பது வாடிக்கையாளர்களை கவரலாம். நகர்ப்புறத்திற்கு மிகவும் ஏற்றதாக வருவதும் டாடா நானோ ஏஎம்டி மாடல் விற்பனை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் நிச்சயம் ஆல்ட்டோ பிராண்டின் விற்பனையில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

04.ரெனோ லாட்ஜி
மாருதி எர்டிகாவுக்கு ஏற்கனவே ஹோண்டா மொபிலியோ, டட்சன் கோ ப்ளஸ் ஆகிய போட்டியாளர்கள் இருக்கின்றனர். கோ ப்ளஸ் விற்பனை சிறிதெனினும், அதன் பாதிப்பு எர்டிகாவுக்கு உண்டு. இந்த வரிசையில், விரைவில் ரெனோ லாட்ஜி எம்பிவி காரும் இணைய இருக்கிறது. சிறப்பான இடவசதியுடன், சரியான விலையில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாருதி எர்டிகா விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

03.ஹூண்டாய் ஐஎக்ஸ்25
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் இன்னும் மாருதி காலடி பதிக்கவில்லை. ஆனால், போட்டியாளர்கள் இந்த செக்மென்ட்டில் அவசரமாக புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றனர். விரைவில் ஹூண்டாய் நிறுவனம் இந்த செக்மென்ட்டில் புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் மாருதி நுழைவதற்குள் போட்டியாளர்கள் கணிசமான விற்பனையை பதிவு செய்து போட்ட முதலை எடுத்துவிடுவர். இந்த செக்மென்ட்டில் மாடல் இல்லாததால் மாருதி கணிசமான இழப்பை சந்தித்து வருவது உண்மை.

02.நெருக்கடி
ஒரு சில செக்மென்ட்டுகளில் மட்டும் ஒருசில கார் மாடல்கள் மூலம் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை மாருதி சாதித்து வருகிறது. ஆனால், அந்த கார்களுக்கு போட்டியாக தொடர்ந்து புதிய மாடல்கள் வருவது ஒருபுறம் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மற்றொரு பக்கம் காம்பேக்ட் எஸ்யூவி, ஹேட்ச்பேக் க்ராஸ்ஓவர் உள்ளிட்ட ரகங்களில் புதிய மாடல்களை போட்டியாளர்கள் இறக்கி வருகின்றனர்.

01.மாருதி அஸ்திரங்கள்
செலெரியோ டீசல், பிரிமியம் ஹேட்ச்பேக் கார், எஸ்எக்ஸ்4 க்ராஸ்ஓவர், எர்டிகா ஃபேஸ்லிஃப்ட், காம்பேக்ட் எஸ்யூவி போன்ற கார் மாடல்களை களமிறக்க மாருதி திட்டமிட்டிருக்கிறது. எந்த வகை கார்களை மாருதி அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். கருத்துக்களை பகிரந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








