டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் சாலை சோதனைகள் தீவிரம்!
மஹிந்திரா எக்ஸ்யூவி 500வுக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் களமிறக்க இருக்கும் புதிய ஹெக்ஸா எஸ்யூவி தற்போது தீவிர சாலை சோதனைகளில் இருக்கிறது.
மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த எஸ்யூவி முதல்முறையாக கேமராக் கண்களில் சிக்கி, இணையதளங்களில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறது.

ஆரியா பிளாட்ஃபார்ம்
டாடா ஆரியா எம்பிவி காரின் அடிப்படையில் எஸ்யூவி மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவியில் 6 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகள் இருக்கும். டாடா ஹெக்ஸா எஸ்யூவி 4,764 மிமீ நீளமும், 1,895 மிமீ அகலமும், 1,780 மிமீ உ.யரமும் கொண்டதாக வடிவமைத்துள்ளனர். இந்த எஸ்யூவி 2,850 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் மிகச்சிறப்பான உட்புற இடவசதியை கொண்டிருக்கும்.

எஞ்சின்
டாடா ஆரியா எம்பிவி காரில் இருக்கும் அதே 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின்தான் இந்த புதிய எஸ்யூவி மாடலிலும் பயன்படுத்தப்பட உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ்ஸ் ஆப்ஷனில் வருகிறது. அதிகபட்சமாக 154 பிஎச்பி., பவரையும் 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

ஆட்டோமேட்டிக் மாடல்
தற்போது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், விற்பனைக்கு வரும் தயாரிப்பு நிலை மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருக்கை அமைப்பு
இந்த எஸ்யூவி மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கிறது. டிரைவரை சேர்த்து ஒரு வரிசையில் தலா 2 பேர் வீதம் 6 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம்.

அறிமுகம்
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








