பிஎம்டபிள்யூ, ஆடி கார்களை ஓவர்டேக் செய்த டெஸ்லா மாடல் எஸ் கார்!
சொகுசு கார் என்றவுடன் அனைவருக்கும் மனதில் வருவது பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஆடி கார் நிறுவனங்களின் தயாரிப்புகள்தான். பாரம்பரியம், தொழில்நுட்ப அம்சங்களும் நிறைந்த இந்த நிறுவனங்களின் கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல அறிமுகமும், அந்தஸ்து மிக்கதாகவும் இருக்கிறது.
இந்தநிலையில், இந்த பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்ப வல்லமைகளை கடந்து தற்போது வாடிக்கையாளர்களின் கவனம் அமெரிக்க தயாரிப்பான டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார் மீது விழுந்திருக்கிறது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, ஐரோப்பாவில் இதன் செக்மென்ட்டிலான சொகுசு கார்களுடன் ஒப்பிடும்போது, மிக அபரிதமான விற்பனை வளர்ச்சியை டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார் பெற்றிருக்கிறது.
மேலும், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ8 கார்களின் விற்பனையில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. அத்துடன் விரைவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் சொகுசு காரையும் விற்பனையில் விஞ்சும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மட்டுமின்றி, உலக அளவில் சொகுசு கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பும் மாடலாகவும் டெஸ்லா மாடல் எஸ் உருவெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புள்ளி விபரம்
ஐரோப்பிய மார்க்கெட்டில், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 2,650 பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார்களும், 4,700 ஆடி ஏ8 கார்களும் விற்பனையாகியிருக்கும் நிலையில், 10,600 டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரைவிட வெறும் 800 கார்கள் மட்டுமே விற்பனை எண்ணிக்கையில் குறைவு. இந்த வேகத்தில் விற்பனை சென்றால், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரைவிட விரைவில் விஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன?
சொகுசு, தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டெஸ்லா மாடல் எஸ் கார் போன்ற காரணங்கள் ஒரு பக்கம். ஆனால், உண்மையான காரணம், பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில், புகை வெளியிடாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெஸ்லா மாடல் எஸ் போன்ற எலக்ட்ரிக் கார்களுக்கு மானியத் திட்டங்களும், சிறப்புச் சலுகைகளும் அதிக அளவில் அங்கு வழங்கப்படுகிறது. இதுவே, விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.

மும்மூர்த்திகளுக்கு நெருக்கடி
டெஸ்லா மாடல் எஸ் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு சொகுசு கார் தயாரிப்பில் ஜாம்பவான் நிறுவனங்களான ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது. டெஸ்லா மாடல் எஸ் காரின் நெருக்கடியை சமாளிக்க உடனடியாக, மின்சாரம் அல்லது இரட்டை எரிபொருள் நுட்பம் கொண்ட கார்களை அறிமுகம் செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் புதிய மாடல்களை கொண்டு வருவதற்குள் டெஸ்லா மாடல் எஸ் கார் உலகின் அதிகம் விற்பனையாகும் விலையுயர்ந்த சொகுசு செடான் கார் என்ற பெருமையை பெறும் சூழல் உருவாகியுள்ளது.

வரவேற்பு ஏன்?
ஐரோப்பாவில் ஊக்குவிப்பு மற்றும் மானியம் வழங்கப்படுவதால், டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது என்று ஒரு காரணத்தை பார்த்தோம். ஆனால், ஊக்குவிப்பு சலுகைகள், மானியத் திட்டங்கள் வழங்கியும், பிற எலக்ட்ரிக் கார் மாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும், சொகுசு கார் தயாரிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட, ஜெர்மானிய நிறுவனங்களை தாண்டி, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல காரணங்கள் இந்த காரில் உள்ளன. அவற்றை தொடர்ந்து காணலாம்.

7 சீட்டர் செடான்
இந்த காரில் அதிகபட்சமாக 7 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதியை பெற முடியும். ஆச்சரியம் முட்டுகிறதா? ஆம், இந்த காரில் சாதாரண பெட்ரோல், டீசல் எஞ்சினுக்கு வேலை இல்லை. எஞ்சின் வைப்பதற்கான பகுதியில் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி உள்ளது. காரின் பின்பகுதியில் சிறியவர்கள் அமரும் வகையில், வேண்டும்போது பயன்படுத்துவதற்கான பின்னோக்கிய இரண்டு 'ஜம்ப்' இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம், முன்வரிசை, நடுவரிசை தவிர்த்து மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டது.

இழுவிசை குறைவு
தோற்றத்தில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியிலான வடிவமைப்பிலும் மிகச்சிறப்பான எலக்ட்ரிக் கார் மாடல் டெஸ்லா மாடல் எஸ். முன்புற பம்பரில் மோதும் எதிர்காற்று வெகு அழகாக விலக்கப்பட்டு, காரின் செயல்திறனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத டிசைன் அம்சம் கொண்டது. அதாவது, எனவேதான், பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறனை வழங்குவதோடு, தேவைப்படும்போது மட்டும் மின் மோட்டாரை குளிர்ச்சி செய்வதற்கான காற்றோட்ட பாதைகள் திறக்கும். இதன்மூலம், காற்றினால் ஏற்படும் இழுவிசை குறைக்கப்பட்டு, பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவதையும் தடுக்கிறது. அதிக நிலைத்தன்மையை தரும் விதத்தில், பேட்டரி தரை தளத்தில் இருக்கிறது.

செயல்திறன்
இதன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்கள் 0 - 96 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் தொட்டுவிடும் வல்லமை கொண்டது. இது எலக்ட்ரிக் கார் என்பதை மனதில் கொள்க. மேலும், இதன் பயண தூரமும் மிக அதிகம். அதுபற்றி விபரங்கள் அடுத்த ஸ்லைடில் காணலாம்.

மாடல்கள்
டெஸ்லா மாடல் எஸ் கார் வாடிக்கையாளர்களின் பட்ஜெட், விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு வசதியாக 5 மாடல்களில் கிடைக்கிறது. அதில், 70D, 85D, P85D ஆகிய மூன்று மாடல்களும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த மாடல்தான் செயல்திறனில் மிரட்டலாக இருக்கிறது. அடுத்து, 70 மற்றும் 85 என்று குறிப்பிடப்படும் இரண்டு மாடல்கள் ரியர் வீல் டிரைவ் எனப்படும் பின்சக்கரங்களுக்கு மட்டும் மின் மோட்டாரின் பவர் செலுத்தப்படும் தொழில்நுட்பத்தை கொண்டது. இதில், 70 மற்றும் 85 என்பது பேட்டரியின் kWh எனப்படும் மின் ஆற்றல் திறனை குறிக்கிறது.

பவர்ஃபுல் மோட்டார்
டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் சொகுசு காரின் 70D மாடலில் முன் மற்றும் பின்புற மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 328 எச்பி பவரை அளிக்கும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும். இரண்டாவது 85D மாடலில் இருக்கும் முன்புற மற்றும் பின்புற மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 417 எச்பி பவரை அளிக்கும். இந்த மாடல் மணிக்கு 249 கிமீ வேகம் வரை தொடும். மூன்றாவது, P85D மாடலில் முன்புறத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் மோட்டார் 259 எச்பி பவரையும், பின்புற மோட்டார்கல் 503 எச்பி பவரையும் வழங்க வல்லது. அதிகபட்சமாக 249 கிமீ வேகம் வரை செல்லும். மாடல் எஸ் 70 மாடலில் இருக்கும் மோட்டார் அதிகபட்சம் 315 எச்பி பவரையும், 85 மாடலில் இருக்கும் மோட்டார் 373 எச்பி பவரையும் வழங்க வல்லது. இவை இரண்டும் மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும்.

ரேஞ்ச்
டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் சொகுசு காரின் 70D மாடலின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 386 கிமீ தூரம் பயணிக்க முடியும். இரண்டாவது, 85D மாடலின் பேட்டரி சார்ஜ் மூலமாக 434 கிமீ தூரம் பயணிக்க முடியும். அடுத்து, P85D மாடலின் பேட்டரி சார்ஜ் மூலமாக 407 கிமீ தூரம் பயணிக்க முடியும். ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 70 மாடலில் இருக்கும் பேட்டரியின் சார்ஜை வைத்து 370 கிமீ தூரம் செல்ல முடியும். கடைசியான 85 மாடலின் பேட்டரி மூலமாக, 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
இந்த காரில் இருக்கும் 17 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக ஏராளமான தகவல்களையும், பொழுதுபோக்கு வசதிகளையும் பெற முடியும். வைஃபை இன்டர்நெட், ஒன் டச் பவர் விண்டோஸ், எளிதாக காருக்குள் நுழைவதற்கான ஆட்டோமேட்டிக் கீ லெஸ் என்ட்ரி, ஆன்போர்டு நேவிகேஷன், உயர் துல்லிய பின்புற கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் என பட்டியல் நீள்கிறது.

சிறப்பு வசதிகள்
ஆட்டோ பைலட் சிஸ்டம் உள்ளது. இதன்மூலமாக, போக்குவரத்து நெரிசல் குறித்த தகவலை முன்கூட்டியே உணர்ந்து செயல்படக்கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், தானியங்கி முறையில் தடம் மாறுவதற்கான வசதி, தானியங்கி முறையில் பேரலல் பார்க்கிங் செய்யும் வசதி, ஆட்டோமேட்டிக் லோ பீம் மற்றும் ஹை பீம் வெளிச்சத்தை தரும் வசதி என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பாதுகாப்பு வசதிகள்
பகல் நேர விளக்குகள், காரை நிலைத்தன்மையுடன் செலுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், 8 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், தடம் மாறுவதை எச்சரிக்கும் வசதி, பார்க்கிங் சென்சார்கள், வேக வரம்பை காட்டும் திரை உள்ளிட்டவை இருக்கின்றன. வேகத்துக்கு தக்கவாறு காரின் உயரத்தை கூட்டிக் குறைப்பதற்கான ஏர் சஸ்பென்ஷன் அமைப்பும் குறிப்பிடத்தக்கது.

விலை மதிப்பு
டெஸ்லா மாடல் எஸ் காரின் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 70 மாடல் 69,900 டாலர் விலையிலும், 85 மாடல் 70,000 டாலர் விலையிலும் கிடைக்கிறது. மாடல் எஸ் காரின் 70D மாடல் 75,000 டாலர் விலையிலும், 85D மாடல் 79,900 டாலர் விலையிலும், P85D மாடல் 1,05,000 டாலர் விலையிலும் கிடைக்கிறது. உலகின் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாகவும் இந்த எலக்ட்ரிக் கார் பெருமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதர செய்திகள்
01. தெஸ்லாவுக்கு அடித்த ஜாக்பாட்...
02. ராணுவ உடுப்பில் டெஸ்லா மாடல் எஸ்...
03. 'மேட் இன் சைனா' டெஸ்லா மாடல் எஸ்...


Click it and Unblock the Notifications








