2015ல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய கார்கள்!
வரிச்சலுகை, எரிபொருள் விலை குறைப்பு போன்ற காரணங்களால் சென்ற ஆண்டு கார் மார்க்கெட் சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், வரிச்சலுகை ரத்து, விலை உயர்வு போன்ற புதிய சவால்களோடு புத்தாண்டை அரை மனதோடு வரவேற்றுள்ளன கார் நிறுவனங்கள்.
இந்த ஆண்டிலும் விற்பனை வளர்ச்சியை பெறுவதற்கு புதிய உத்திகள் அதற்கு வலு சேர்க்கும் விதத்தில், பல புதிய மாடல்களுடன் சவால்களை நீர்க்கச் செய்வதற்கான உத்வேகத்துடன் தயாராகி வருகின்றன கார் நிறுவனங்கள். அந்த உத்வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இந்த ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் குறிப்பிட்ட கார் மாடல்களை தேர்வு செய்து ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

புதிய மாடல்கள்
இந்த ஆண்டு வர இருக்கும் சில முக்கிய கார் மாடல்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

1.டட்சன் கோ ப்ளஸ்
மினி எம்பிவி செக்மென்ட்டில் முதல் மாடலாக டட்சன் கோ ப்ளஸ் வரும் 20ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. பட்ஜெட் விலையில் ஓர் எம்பிவியை வாங்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் உகந்த மாடலாக இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டுமே வரும் இந்த புதிய மாடலுக்கு நேரடி போட்டியாக இப்போது எந்த மாடலையும் குறிப்பிட முடியாது. டாப் வேரியண்ட் மாடல் ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. டாடா போல்ட்
வரும் 15ந் தேதி டாடா போல்ட் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் இதுவும் ஒன்று. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மாடலாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் இந்த கார் வரவை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில், மல்டி டிரைவ் ஆப்ஷன் கொண்ட பெட்ரோல் மாடல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் மாடலில் இந்த கார் வர இருக்கிறது. இந்த மாடல் வெற்றி பெற்றால், அது மாருதி ஸ்விஃப்ட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். ரூ.4.50 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3.ஃபியட் அபார்த்
இந்திய மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடித்துவிடும் துடிப்புடன் பல புதிய மாடல்களை வரிசைக்கட்ட ஃபியட் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டில் முதல் மாடலாக அபார்த் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த மாதம் மும்பையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அபார்த் 595 கார்தான் இந்தியாவுக்கான மாடலாக தெரிவிக்கப்படுகிறது. மினி பிராண்டு கார் மாடல்களுக்கு இது போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

4. ரெனோ லாட்ஜி
டஸ்ட்டரை போன்றே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் ரெனோ லாட்ஜி எம்பிவி கார். பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் வரும் இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி கார் ஹோண்டா மொபிலியோவுக்கு நேரடி போட்டியாக இருக்கும். ரூ7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு உறுதி செய்யப்பட்ட மாடல்களில் இதுவும் ஒன்று.

5.ஹோண்டா ஜாஸ்
மிக நீண்டகால எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் முதல்முறையாக டீசல் மாடலிலும் வர இருக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். நேர்த்தியான டிசைன், புதிய சிறப்பம்சங்களுடன் வரும் இந்த கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. ஃபோர்டு காம்பேக்ட் செடான்
இந்த ஆண்டு புதிய ஃபோர்டு ஃபிகோ காரும், அதன் அடிப்படையிலான காம்பேக்ட் செடான் காரையும் ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த காம்பேக்ட் செடான் டாடா ஸெஸ்ட், ஹூண்டாய் எக்ஸென்ட் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது.

7.மஹிந்திரா மினி எஸ்யூவி
இந்த ஆண்டு மிக மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்களில் ஒன்று மஹிந்திராவின் மினி எஸ்யூவி. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மாடல் மிக தீவிரமான சாலை சோதனைகளில் இருந்து வருகிறது. மஹிந்திரா எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த மாடல் 6 இருக்கைகள் கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் இந்த புதிய மாடலுக்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
Photo Credit: Autocarindia

8. மாருதி செலிரியோ டீசல்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்களில் மாருதி செலிரியோ டீசல் மாடலும் ஒன்று. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் 800சிசி டீசல் எஞ்சினுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது. மேலும், மைலேஜ் லிட்டருக்கு 35 கிமீ வரை இருக்கும் என்பதும், பலரது கார் வாங்கும் ஆசையை தள்ளி போட வைத்திருக்கிறது.

10. ஹூண்டாய் ஐஎக்ஸ்25
அருமையான டிசைன் கொண்டதாக வரும் புதிய ஹூண்டாய் ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவி மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வரும் இந்த புதிய மாடல் பெரும் வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரெனோ டஸ்ட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

11. ஹூண்டாய் எலைட் ஐ20 கிராஸ்
ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து அடுத்து எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்த புதிய கிராஸ்ஓவர் மாடல் தற்போது தீவிர சோதனைகளில் இருந்து வருகிறது. எலைட் ஐ20 காரில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் மாற்றங்களை செய்து கிராஸ்ஓவர் மாடலாக உருவகம் பெற்றிருக்கிறது. டொயோட்டா எட்டியோஸ் கிராஸ், ஃபியட் அவென்ச்சுராவுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

புதிய கார்கள்
தொகுக்கப்பட்ட பட்டியலில் முக்கியமான புதிய கார்களை படித்தீர்கள். புதிதாக கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த பட்டியல் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








