யூஸ்டு கார் மார்க்கெட்டில் விற்பனையில் டாப் 10 கார்கள்!
ஆன்லைன் மூலமாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும், விற்கும் வசதியை வழங்கி வரும் ட்ரூம் இணையதளம், யூஸ்டு கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டாப் 10 கார்களின் விபரங்களை வெளியிட்டிருக்கிறது.
அதில், சில கார் மாடல்களுக்கு ஆச்சரியப்படும் அளவுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஆதரவு நல்கி வருவது புலனாகிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

10. ஹூண்டாய் ஆக்சென்ட்
விற்பனை நிறுத்தப்பட்டு விட்டாலும், யூஸ்டு மார்க்கெட்டில் ஹூண்டாய் ஆக்சென்ட் காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மலிவான விலையில் ஓர் சிறந்த செடான் காரை வாங்குவதற்கான வாய்ப்பை இந்த கார் மூலமாக பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். நல்ல இடவசதி, சிறந்த எஞ்சின் ஆகியவை இந்த காருக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன. உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், தொடர்ந்து உதிரிபாகங்கள் சப்ளை கிடைக்கும் என்பதாலும் வாடிக்கையாளர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

09. ஹூண்டாய் வெர்னா
யூஸ்டு மார்க்கெட்டில் ஹூண்டாய் கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதை பரைசாற்றும் மற்றொரு கார் மாடல். சற்று பிரிமியமாகவும் இருக்க வேண்டும்; பட்ஜெட்டும் கட்டுபாடியாக வேண்டும் என்பவர்களுக்கான சாய்ஸாக இருந்து வருவதே இந்த காருக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற்று தந்திருக்கிறது.

08. மாருதி எஸ்எக்ஸ்-4
உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதால் மிக மலிவான விலையில் ஏராளமான கார்கள் கிடைக்கின்றன. இடவசதி, மாருதியின் சர்வீஸ் நெட்வொர்க் ஆகியவை இந்த காருக்கு வலுசேர்க்கின்றன. சில கார்கள் புதிய கார் மார்க்கெட்டை விட, யூஸ்டு கார் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில், யூஸ்டு மார்க்கெட்டில் மிக சரியான விலையில் கிடைக்கும் மிட்சைஸ் செடானாக மாறியிருக்கிறது மாருதி எஸ்எக்ஸ்-4.

07. ஹூண்டாய் ஐ20
புதிய ஹூண்டாய் ஐ20 காரின் விலையை கண்டு ஒதுங்கியவர்கள், நேராக யூஸ்டு மார்க்கெட்டில் போய் ஐ20 காரை வாங்கிவிடுகின்றனர். புதிய மாடல் வந்துவிட்டதால், சென்ற தலைமுறை மாடல் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. மேலும், டிசைன், வசதிகள் என அனைத்திலும் நிறைவை தரும் மாடல் என்பதும் வரவேற்பு பலமாக இருக்கிறது.

06. மாருதி வேகன்- ஆர்
புதிய மார்க்கெட்டிலும் சரி, பழைய கார் மார்க்கெட்டிலும் சரி மாருதி வேகன் ஆர் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ரூ.2 லட்சத்தில் நல்ல கண்டிஷனில் உள்ள வேகன் ஆர் காரை வாங்கிட முடிகிறது என்பதும் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. குறைவான பராமரிப்பு செலவீனம், மீண்டும் மறுவிற்பனை செய்யும்போது நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. தினசரி பயன்பாட்டுக்கான மிகச்சரியான மாடல்.

05. மாருதி டிசையர்
நடுத்தர வர்க்கத்தினரின் செடான் ஆசையை நிறைவேற்றும் மாடல். விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் மாருதி டிசையர் கார் பழைய கார் மார்க்கெட்டிலும் அந்த நிலையை தக்க வைத்து வருகிறது. நம்பகத்தன்மை மிக்க மாடலாக இருப்பதும், மாருதியின் பெரிய அளவிலான சர்வீஸ் நெட்வொர்க், குறைவான பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ் ஆகியவை இந்த காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது.

04. ஹோண்டா சிட்டி
யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிக்கு தனி மதிப்பு இருந்து வருகிறது. தரம், டிசைன் என்று அனைத்து தலைமுறை ஹோண்டா சிட்டி கார்களும் இன்று வரை நல்ல மதிப்பை யூஸ்டு மார்க்கெட்டில் தக்க வைத்து வருகிறது. ஹோண்டா சிட்டியின் நம்பகத்தன்மை வாய்ந்த பெட்ரோல் எஞ்சின்தான் வாடிக்கையாளர்களை கவர மிக முக்கியமான காரணமாக உள்ளது.

03. மாருதி ஸ்விஃப்ட்
இந்தியர்களின் மனம் கவர்ந்த ஹேட்ச்பேக் மாடல். யூஸ்டு மார்க்கெட்டில் கைக்கு தோதான பட்ஜெட்டில் மிகச்சிறந்த ஸ்விஃப்ட் காரைகளை வாங்கிவிட முடியும். டிசைன், மைலேஜ் ஆகியவை முக்கியமான அம்சங்கள். அத்துடன் குறைவான பராமரிப்பு செலவு.

02. ஹூண்டாய் சான்ட்ரோ
இந்திய கார் மார்க்கெட்டின் மார்கண்டேயன் என்றால் அது ஹூண்டாய் சான்ட்ரோதான். கடைசி வரை விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்தததுடன், யூஸ்டு மார்க்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டாலும், இன்னும் 15 ஆண்டுகள் வரை உதிரிபாகங்கள் சப்ளை இருக்கும் என்பதால், இந்த காரை நம்பி வாங்குகின்றனர். இடவசதி, டிசைன், மைலேஜ் என்பதோடு, மிகச் சரியான விலையில் யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

01. ஹூண்டாய் ஐ10
நீண்ட காலமாக யூஸ்டு மார்க்கெட்டில் நம்பர்- 1 இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது ஹூண்டாய் ஐ10. செயல்திறன் மிக்க எஞ்சின், டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகிறது. தினசரி பயன்பாட்டையும், நெடுந்தூர பயணங்களையும் செம்மையாக பூர்த்தி செய்ய உதவும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில், நிறைந்த வசதிகளுடன் கூடிய சிறந்த யூஸ்டு காராக இருக்கும். புதிய கார் மார்க்கெட்டில் மாருதி என்றால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஹூண்டாய்தான் முன்னிலை வகிப்பதை இந்த பட்டியல் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








