டாப் -10 யுட்டிலிட்டி கார் பட்டியலிலிருந்து வெளியேறிய டஸ்ட்டர்!!
இப்போது இந்தியாவின் அதிகம் விரும்பும் செக்மென்ட்டுகளில் எஸ்யூவி மற்றும் எம்பிவி வகை கார்களை உள்ளடக்கிய யுட்டிலிட்டி ரக கார் மார்க்கெட்டும் ஒன்று. தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல்களால் இந்த செக்மென்ட் தற்போது வலுவானதாகவும், வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு எளிதான பல மாடல்களை உள்ளடக்கியதாகவும் மாறியிருக்கிறது.
இந்தநிலையில், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டின் பெஞ்ச்மார்க் மாடலாக வெற்றி பெற்ற ரெனோ டஸ்ட்டரின் விற்பனை தற்போது மாதத்திற்கு மாதம் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், யுட்டிலிட்டி ரக கார்களின் டாப் 10 பட்டியலில் கூட இடம்பெற முடியாத அளவுககு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிக போட்டி மிகுந்த இந்த மார்க்கெட்டில் விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த யுட்டிலிட்டி ரக கார்களின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

10. டொயோட்டா ஃபார்ச்சூனர்
யுட்டிலிட்டி கார் ரகத்தில் 10வது இடத்தை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பிடித்துள்ளது. கடந்த மாதம் 1,089 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, கடந்த மாதம் விற்பனை 37.5 சதவீதம் குறைவு. புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் விரைவில் வருவதாக வெளியானத் தகவல்கள், இந்த மாடலின் விற்பனையை குறைத்துள்ளது. கம்பீரமான டிசைனும், செயல்திறன் மிக்க எஞ்சினும் இந்த எஸ்யூவியை பிரிமியம் செக்மென்ட்டில் முதலிடத்தில் வைத்திருக்கிறது.

09. மாருதி எர்டிகா
மாருதி எர்டிகாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகையால், கடந்த மாதம் பழைய மாடலின் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. கடந்த மாதம் 2,641 மாருதி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 53.4 சதவீதம் குறைவு. சமீபத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் எர்டிகாவின் டீசல் மாடலில் ஹைபிரிட் சிஸ்டம் இருப்பதால், அதிக மைலேஜ் வழங்கும் மாடலாக வெளிவந்துள்ளது. மேலும், மிக சரியான விலையில் சிறப்பான காம்பேக்ட் எம்பிவி மாடல் என்ற பெருமை மாருதி எர்டிகாவுக்கு எப்போதும் இருப்பது பலம்.

08. மஹிந்திரா எக்ஸ்யூவி 500
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் விற்பனை ஸ்திரமான நிலையில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் வந்த மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500வும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 3,110 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 3,035 எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும், கடந்த மாதம் விற்பனையில் 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

07. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
நகர்ப்புற வாடிக்கையாளர்களின் நம்பர் 1 மாடலாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விளங்குகிறது. நவநாகரீகமான தோற்றம், வசதிகள் என்று வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஆனால், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மஹிந்திரா டியூவி 300 போன்ற புதிய மாடல்களின் வரவு இந்த எஸ்யூவிக்கான வரவேற்பை குறைத்திருக்கிறது. கடந்த மாதம் 3,121 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 4,515 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

06. மாருதி எஸ் - க்ராஸ்
மாருதி நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்த எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடல் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. ஆயினும், மாருதியின் அனைத்து மார்க்கெட்டிங் வித்தைகளின் பலனாக கடந்த மாதம் 3,603 மாருதி எஸ் க்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. வரும் மாதங்களில் விற்பனையில் எஸ் க்ராஸ் எந்தளவு மாருதிக்கு சாதித்துக் கொடுக்கிறது என்பதை பார்க்கலாம்.

05. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல் ஸ்கார்ப்பியோ. கடந்த மாதம் 4,313 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. நம்பகத்தன்மை வாய்ந்த இந்த எஸ்யூவியின் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 29 சதவீதம் குறைந்துவிட்டது. ஆனாலும், ஒரு ஸ்திரமான விற்பனை பங்களிப்பை வழங்கி வருகிறது.

04. மஹிந்திரா டியூவி 300
இன்ஸ்டன்ட் ஹிட் என்று கூறுவது போன்று முதல் மாதத்திலேயே விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து டாப் 10 பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது மஹிந்திரா டியூவி 300. கடந்த மாதம் 4,321 மஹிந்திரா டியூவி 300 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. வசதிகள், பாதுகாப்பு, தனித்துவமான தோற்றம் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்திருப்பதாக கூறலாம். வரும் மாதங்களில் விற்பனையை தக்க வைக்குமா என்பதை பார்க்கலாம்.

03. டொயோட்டா இன்னோவா
கடந்த மாதம் 3வது இடத்தில் டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இருக்கிறது. இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான எம்பிவி கார் என்ற பெருமையுடன் தொடர்ந்து விற்பனையில் சிறப்பான இடத்தை பதிவு செய்து வருகிறது. இதன் விசாலமான இடவசதி, அதிர்வுகள் குறைவான பயணம் போன்றவை வாடிக்கையாளர்களிடம் தனி மதிப்பையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 5,430 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, விற்பனை 7.5 சதவீதம் குறைவு.

02. மஹிந்திரா பொலிரோ
கடந்த மாதம் 2வது இடத்தில் மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8,541 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன், யுட்டிலிட்டி கார் ரகத்தில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், புதிய ஹூண்டாய் க்ரெட்டா வரவும், மஹிந்திராவின் புதிய எஸ்யூவி மாடலான டியூவி 300 வரவும் மஹிந்திரா பொலிரோ விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த மாதம் 5,585 பொலிரோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

01. ஹூண்டாய் க்ரெட்டா
வெகு சீக்கிரத்தில் டாப் 10 பட்டியலில் முதலிடத்தை பெற்று அசத்தியிருக்கிறது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி. கடந்த மாதம் 7,256 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. அசத்தலான டிசைன், வசதிகள் ஆகியவை இந்த எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. மாருதியின் வலுவான சர்வீஸ் கட்டமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் களமிறங்கிய மாருதி எஸ் க்ராஸ் காரின் போட்டியை ஒரு பொருட்டாக நினைக்காமல், விற்பனையில் மிகச்சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது ஹூண்டாய் க்ரெட்டா.

அப்போ டஸ்ட்டர் விற்பனை?
புதிய மாடல்களின் வரவு ரெனோ டஸ்ட்டரின் விற்பனையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டன. கடந்த மாதம் வெறும் 1,009 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ரெனோ டஸ்ட்டர் வந்தாலும், விற்பனை எந்தளவுக்கு மேம்படும் என்பது சந்தேகமாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








