உள்நாட்டு கார் விற்பனையில் டாப்- 8 கார் நிறுவனங்கள்!
அக்டோபரை தொடர்ந்து, நவம்பரிலும் கார் விற்பனை சற்று ஏறுமுகமாகவே இருந்தது. கடந்த மாதமும் கார் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்து கார் நிறுவனங்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
இந்த நிலையில், கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில், கடந்த மாதத்தில் விற்பனையில் முதல் எட்டு இடங்களை பிடித்த கார் நிறுவனங்கள் மற்றும் அதன் விற்பனை எண்ணிக்கை, வளர்ச்சி விகிதம் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

08. ரெனோ நிறுவனம்
கடந்த மாதம் 144 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் புதிய போட்டியாளராக விஸ்வரூபம் எடுத்துள்ளது ரெனோ கார் நிறுவனம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் க்விட் கார் இதுவரை 70,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்று அசத்தியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 7,819 கார்களை விற்பனை செய்திருக்கிறது ரெனோ கார் நிறுவனம். கடந்த ஆண்டு நவம்பரில் அந்த நிறுவனம் வெறும் 3,201 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் பங்களிப்பும் வெகுவாக உயரத் துவங்கியிருக்கிறது.

07. ஃபோர்டு இந்தியா
கடந்த மாதம் உள்நாட்டு சந்தையில் 8,773 கார்களை விற்பனை செய்து ஏழாவது இடத்தில் இருக்கிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம். கடந்த ஆண்டு நவம்பரில் 5,661 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் 8,773 கார்களை விற்பனை செய்திருக்கிறது. புதிய ஆஸ்பயர், ஃபிகோ கார்களின் வரவும், ஈக்கோஸ்போர்ட்டுக்கு இருந்து வரும் மவுசும் அந்த நிறுவனத்தின் விற்பனையை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறது.

06. டொயோட்டா
கடந்த மாதம் 7வது இடத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 12,175 கார்களை விற்பனை செய்திருந்த டொயோட்டா, கடந்த மாதம் 10,278 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 15.58 சதவீதம் குறைந்தது.

05. டாடா மோட்டார்ஸ்
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், உள்நாட்டு சந்தையில் 12,021 கார்களை விற்பனை செய்திருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மாதம் 15,517 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரைவிட 13 சதவீதம் குறைவு. தொடர்ந்து விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வால்யூம் செக்மென்ட் எனப்படும் அதிக விற்பனை எண்ணிக்கை கொண்ட பட்ஜெட் கார் செக்மென்ட்டில் விரைவில் டாடா ஸீக்கா என்ற புத்தம் புதிய மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா மோட்டார்ஸ். அத்துடன், புதிய காம்பேக்ட் எஸ்யூவி உள்ளிட்ட புத்தம் புதிய மாடல்கள் மூலமாக தனது வர்த்தகத்தை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் முயற்சித்து வருகிறது.

04. ஹோண்டா கார் நிறுவனம்
ஹோண்டா கார் நிறுவனம் 6வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 15,263 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் 14,712 கார்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைவிட, கடந்த மாத விற்பனை 3.61 சதவீதம் குறைந்தது. புதிய சிட்டி மற்றும் அமேஸ் கார்களை வைத்து ஹோண்டா நிறுவனம் விற்பனையை சரிகட்ட வருகிறது. அடுத்த ஆண்டு காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் புதிய பிஆர்-வி எஸ்யூவியையும் களமிறக்கி தனது மார்க்கெட் பங்களிப்பை தக்க வைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அத்துடன், சிறிய கார் செக்மென்ட்டில் நுழைவது குறித்தும் பரிசீலித்து வருகிறது.

03. மஹிந்திரா
யுட்டிலிட்டி வாகனங்களை வைத்து விற்பனையில் அசரடித்து வருகிறது மஹிந்திரா நிறுவனம். கடந்த மாதம் 19,662 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 14,473 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 36 சதவீதம் கூடுதல் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து தனது மார்க்கெட் பங்களிப்பை உயர்த்த முற்பட்டு வருகிறது. விரைவில் பட்ஜெட் விலையில் ஒரு மினி எஸ்யூவி மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது நிச்சயமாக மஹிந்திராவின் விற்பனையை மேலும் உயர்த்தும் வாய்ப்பை கொடுக்கும் என நம்பலாம்.

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 43,651 கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 35,511 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 கார்களும், சமீபத்தில் வந்த ஹூண்டாய் க்ரெட்டாவும் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதால், அந்த நிறுவனத்தின் விற்பனை மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

01. மாருதி சுஸுகி
இந்திய கார் மார்க்கெட்டின் பாதியளவு பங்களிப்பை தொடர்ந்து தக்க வைத்து, முதலிடத்தில் இருந்து வருகிறது மாருதி கார் நிறுவனம். கடந்த மாதம் 1,10,599 கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 1,00,024 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 10.60 சதவீதம் அளவுக்கு கூடுதல் விற்பனையை பதிவு செய்திருக்கிறது. தொடர்ந்து வரும் சந்தை நெருக்கடிகளை மிக சிறப்பாக கையாண்டு வருகிறது. ஹைபிரிட் மாடல்கள், அதிக பாதுகாப்பு அம்சங்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்ற அம்சங்களுடன் கார்களை தொடர்ந்து மேம்படுத்தி வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications








