அஸ்ட்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் கான்செப்ட்... ஜேம்ஸ்பாண்ட்டுக்கான புதிய மாடல் ரெடி!
எதிர்கால டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வெளியுலகுக்கு காட்டும் விதத்தில் கான்செப்ட் மாடல்களை உருவாக்கி மோட்டார் கண்காட்சிகளில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் காட்சிக்கு வைக்கின்றன. அவற்றில் சில மாடல்கள் வர்த்தக தயாரிப்புக்கு செல்லும் விதத்திலோ அல்லது சில மாடல்கள் தொழில்நுட்ப வல்லமையை காட்டும் விதத்திலோ காட்சிக்கு இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பார்வையாளர்களையும், ஆட்டோமொபைல் பிரியர்களையும் கவர்ந்த முக்கிய கான்செப்ட் மாடல்களின் தகவல்களை சிறப்புத் தொகுப்பாக இங்கே வழங்கியுள்ளோம். இந்த கான்செப்ட்டுகளில் இருக்கும் சில முக்கிய தொழில்நுட்ப விஷயங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டாப் கான்செப்ட் கார்கள்
எமது தேர்வில் இடம்பிடித்த டாப் கான்செப்ட் கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1. சீட் 20V20
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் சீட் கார் பிராண்டு புதிய பிரிமியம் க்ராஸ்ஓவர் காரின் கான்செப்ட் மாடலை ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது. ஃபோக்ஸ்வேகன் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இந்த கான்செப்ட் 2020ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உணர்த்தும் வகையில் 20V20 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

2. ஃபோக்ஸ்வேகன் ஸ்போர்ட் கூபே கான்செப்ட் ஜிடிஇ
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எதிர்காலத்தில் வடிவமைக்கும் பி மற்றும் சி செக்மென்ட் கார்களுக்கான முன்மாதிரி டிசைன் கொண்ட புதிய கான்செப்ட் மாடல் ஜெனிவாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்ட செடான் காராக இருக்கும் என்பதுதான் ஹைலைட்.

3. ஆடி புரோலோக் அவான்த் கான்செப்ட்
கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டோர் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புரோலோக் கூபே கான்செப்ட்டின் அடிப்படையிலான மற்றொரு கான்செப்ட் மாடல் இது. ஆடி புரோலோக் கூபே கான்செப்ட்டைவிட சிறிது நீள, அகல மற்றும் உயரத்தில் அதிகரித்திருக்கிறது இந்த புரோலோக் அவான்த் கான்செப்ட். இந்த கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலில் லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இது எலக்ட்ரிக் மோட்டார்களையும் கொண்டு ஒரு ஹைபிரிட் மாடலாக வர இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 449 எச்பி பவரை அளிக்கும் காராக வருகிறது.

4. அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ்
அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் ஒரு அசத்தலான கான்செப்ட் காரை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. அஸ்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கார் ஓர் முழுமையான எஸ்யூவி மாடலாக உருப்பெற உள்ளது. இந்த அசத்தலான டிசைனுக்கு இப்போதே உலகம் முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். எதிர்கால ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த காரை ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.

5 பென்ட்லீ எக்ஸ் 10 ஸ்பீடு 6 கான்செப்ட்
பென்ட்லீ நிறுவனமும் தன் பங்கிற்கு ஓர் அசத்தலான கான்செப்ட்டை காட்சிக்கு வைத்திருக்கிறது. இந்த 2 சீட்டர் கார் பென்ட்லீயின் உயர் பெர்ஃபார்மென்ஸ் வகை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பென்ட்லீயின் இந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலும் ஜெனிவாவில் கூட்டத்தை கூட்டியிருக்கிறது.

6.நிசான் ஸ்வே
அடுத்த தலைமுறை நிசான் மைக்ரா காரின் கான்செப்ட் மாடல் என்பதால், உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐரோப்பிய டிசைனில் உருவாகும் ஜப்பான் கார் என்பதும், வடிவமைப்பில் மிக அசத்தலாக இருப்பதும் தற்போது விற்பனையில் இருக்கும் பல சிறந்த டிசைன் கொண்ட கார்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது நிசான் ஸ்வே.

7.லெக்சஸ் எல்எஸ்-எஃப்ஏ
டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு பிராண்டான லெக்சஸ் நிறுவனம் முதல் காரை அறிமுகம் செய்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில் ஓர் புதிய கான்செப்ட்டை காட்சிக்கு வைத்துள்ளது. அடக்கமாக அதே வேளையில் மிரட்டலாக இருக்கும் இந்த கார் பல்வேறு நாட்டு பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இந்த காரில் 4 பேர் பயணிக்க முடியுமாம்.

நானோ ஃப்ளோசெல் கான்செப்ட் மாடல்கள்
நானோ ஃப்ளோசெல் நிறுவனம் தனது நானோ ஃப்ளோசெல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் இரண்டு உயர்வகை கார் மாடல்களை ஜெனிவாவில் காட்சிக்கு வைத்திருந்தது. நேர் மின் மற்றும் எதிர்மின் அயனிகள் கொண்ட கரைசல்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் மின்சார கார்கள் என்பதுடன், மின்சார கார்களின் தொழில்நுட்பத்தை புதிய பாதை போட்டு தந்திருக்கிறது இந்த கான்செப்ட் மாடல்கள். இவை ஆகச்சிறந்த செயல்திறனை வழங்கும் என்று நானோ ஃப்ளோசெல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி500 4X4 கான்செப்ட்
ஆஃப்ரோடு சாலைகளுக்கான புதிய கான்செப்ட் ஒன்றை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்தது. மிகச்சிறந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த ஆஃப்ரோடு எஸ்யூவி லேண்ட்ரோவர் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்கும். இந்த கான்செப்ட்டுக்கு ஜெனிவா மோட்டார் ஷோவில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே தயாரிப்புக்கு கொண்டு செல்வது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்ய உள்ளது.

டாடா ஹெக்ஸா எஸ்யூவி கான்செப்ட்
டாடா ஆரியா அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலை ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. அழுது வடிந்த ஆரியாவில் சில டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளை கொடுத்து ஓர் எஸ்யூவியாக மாற்றியிருக்கின்றனர். இந்த எஸ்யூவி ஜெனிவா மோட்டார் கண்காட்சிக்கு வந்த இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








