பட்ஜெட் விலையில் வரும் புதிய மினி எஸ்யூவி மாடல்கள் - சிறப்புத் தொகுப்பு
எஸ்யூவி வகை கார்களின் பாடி ஸ்டைல் மற்றும் தகவமைப்பு அம்சங்கள் இந்தியர்களுக்கு பிடித்தமான ஒன்றாகிவிட்டது. அந்தஸ்தை கூட்டுவதாக இருப்பதோடு, துள்ளளான தோற்றமும், அனைத்து சாலைகளிலும் எளிதாக செலுத்துவதற்கு ஏதுவான இந்த எஸ்யூவி வகை கார்கள் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்வதாக இருக்கின்றன.
சமீபத்தில் வந்த ரெனோ க்விட் கார் பெற்றிருக்கும் மிகப்பெரிய வரவேற்பு, இதற்கு சாட்சி. அத்துடன், பல கார் நிறுவனங்களின் கொள்கை திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன்படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் குறைவான பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு இந்திய சாலைகளில் தடம் பதிக்க இருக்கும் புதிய மினி எஸ்யூவி மாடல்களின் விபரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

01. டட்சன் ரெடி-கோ
டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் களமிறக்க இருக்கும் ஐ2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் மைக்ரோ கிராஸ்ஓவர் ரக கார் மாடல்தான் டட்சன் ரெடி-கோ. ரெனோ க்விட் காருக்கு இணையான விலையில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை
சென்னையிலுள்ள நிசான்- ரெனோ கூட்டணியின் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. ரூ.2.9 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நிசான் திட்டமிட்டு இருக்கிறது. 800சிசி செக்மென்ட்டில் எஸ்யூவி ஸ்டைலில் வரும் புதிய மாடல்களில் ஒன்று என்பதால் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

02. மஹிந்திரா எக்ஸ்யூவி100
சமீபத்தில் வந்த மஹிந்திரா டியூவி300 நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்ததாக ஓர் புதிய மினி எஸ்யூவி மஹிந்திரா களமிறக்க உள்ளது மினி எக்ஸ்யூவி 500 என்று குறிப்பிடப்படும் இந்த மாடல் எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. 4 மீட்டருக்கும் குறைவான இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் 6 சீட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் ஹைலைட்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.3.9 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய மினி எஸ்யூவி மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி100 என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவியை வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

03. மாருதி பிரெஸ்ஸா
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு கவுன்ட்டர் கொடுக்கும் விதத்தில், மாருதி களமிறக்க இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்தான் பிரெஸ்ஸா. இது மலிவான விலை மாடலாக குறிப்பிட முடியாவிட்டாலும், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

எதிர்பார்க்கும் விலை
வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசத்தலான டிசைன் மற்றும் வசதிகளால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது. ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

04. டாடா நெக்ஸான்
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குதிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நெக்ஸான் கான்செப்ட் கிராஸ்ஓவர் மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி வருகிறது அந்த நிறுவனம். எக்ஸ்104 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை
ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இதன் தயாரிப்பு நிலை மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வர டாடா திட்டமிட்டுள்ளது.

05. மாருதி இக்னிஸ்
ரெனோ க்விட் காரின் விஸ்வரூபத்தால் ஏற்பட்டிருக்கும் நிலையை சமாளிப்பதற்காக மாருதி களமிறக்க இருக்கும் மினி எஸ்யூவி மாடல்தான் இக்னிஸ். ஒய்ஜேசி என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த மினி எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.4.5 லட்சம் விலையில் இந்த புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்த புதிய கார் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

அச்சத்தில் ஹேட்ச்பேக்குகள்...
வரிசை கட்டும் புதிய மினி எஸ்யூவி மற்றும் கிராஸ்ஓவர் ரக கார் மாடல்களின் வருகையில், ஆரம்ப நிலை கார் மார்க்கெட் புதிய கோணத்தில் பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும், 2016 ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு பின்னர் வரும் காலக்கட்டத்தில் இந்தியாவின் கார் மார்க்கெட் புதிய மாடல்களின் வருகையாலும், வாடிக்கையாளர்களின் ரசனையாலும் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








