எமிசன் மோசடி எதிரொலி: ஃபோக்ஸ்வேகன் சிஇஓ மார்ட்டின் வின்டர்கார்ன் ராஜினாமா!
டீசல் கார்களில் எமிசன் மோசடி புகாரையடுத்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கார்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் மாசுக்கட்டுப்பாட்டு விபரங்களை தரும் மென்பொருளில் மோசடி இருப்பதை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கண்டறிந்தது. மொத்தம் 1.10 கோடி டீசல் கார்களில் இந்த மோசடி சாஃப்ட்வேர் இருப்பதும், இது தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதும் தெரிய வந்தது.

இது வாடிக்கையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், இந்த மோசடி தொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடக்கிறது. இந்த மோசடியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒப்புக் கொண்டது.
எமிசன் மோசடிக்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் 18 பில்லியன் டாலர்கள் [இந்திய மதிப்பில் 1.18 லட்சம் கோடி] அபராதம் விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி புகார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீதான நன்மதிப்பை வெகுவாக நீர்த்துப் போக செய்துள்ளது.
அத்துடன் அந்த நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கான் தனது பதவியை ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும், எமிசன் மோசடி புகார் தனிப்பட்ட முறையில் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், தனது கவனத்திற்கு வராமல் இந்த விஷயம் நடந்துவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு புதிய துவக்கம் ஏற்படுத்தும் விதத்தில், தனது பதவியை ராஜினமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
உலகின் அதிக கார்களை விற்பனை செய்யும் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு இந்த மோசடி பல விதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 30 சதவீதம் வரை குறைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








