டிரைவர் இல்லாமல் இயங்கும் பிஎம்டபிள்யூ தானியங்கி கார்கள்.... அடுத்த 5 ஆண்டுகளில் அறிமுகமாகிறது...
பல மாடல்களில் உள்ள சொகுசு கார்களை பணம் இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கி வீட்டில் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், என்னதான் செல்வச் செழிப்பு இருந்தாலும், டிரைவிங் தெரியாமல் காரை வெளியே ஓட்டிச் செல்ல முடியுமா?
அந்த சமயங்களில் பிறரின் தயவைத்தான் நம்பி இருக்க வேண்டியிருக்கும். அட இத்தனை விஷயம் தெரிந்து என்ன? கார் ஓட்டத் தெரியாம போச்சே... என வருத்தப்படும் நபரா நீங்கள்? அட, கவலையை விடுங்க பாஸ்... உங்களுக்காகவே வருகிறது பிஎம்டபிள்யூ தானியங்கி கார்கள். காருக்குள் ஏறி நீங்கள் அமர்ந்து கொண்டால் போதும், அது தானாகவே இயங்கி உங்களை உரிய இடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

டிரைவரின் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் விசேஷ தொழில்நுட்பத்தில் இந்தக் கார்கள் வடிவமைக்கப்படவுள்ளன. இதற்கான உற்பத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2021-ஆம் ஆண்டுக்குள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஜெனரல் மோட்டார்ஸ், உபேர், கூகுள் என பல நிறுவனங்கள் இதுபோன்றதொரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளன. ஆனால், வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு அவை இன்னும் வந்துசேரவில்லை.
முதல் முறையாக அப்படி ஒரு தொழில்நுட்பத்துடன் கூடிய காரை அடுத்த ஐந்து ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வருகிறோம் என்று பிஎம்டபிள்யூ உறுதி அளித்துள்ளது.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், தன்னந்தனியாக இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கவில்லை.டெக்னாலஜி லீடர்களாக விளங்கும் ஐரோப்பாவைச் சேர்ந்த இன்டெல், இஸ்ரேலைச் சேர்ந்த மொபிலி ஆகிய நிறுவனத்தின் கூட்டுப் பங்களிப்புடன் தானியங்கி கார் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பல மில்லியன் டாலர்களைக் கொட்டி இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்து தானியங்கி கார்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து விட்டால், நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளிலும் சுகமாகத் தூங்கிக் கொண்டே பிரயாணிக்கலாம்.
கேட்கும்போதே வியப்பாக உள்ளது. ஆனால், இதில் சில நடைமுறைச் சிக்கல்களும் ஒளிந்துள்ளன. அதாவது பாதுகாப்பு. என்னதான் தானியங்கி வாகனமாக இருந்தாலும், அதன் மீது நமக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும், இரண்டாவதாக அந்த கார் நமக்கு எமனாக மாறிவிடக் கூடாது.
எனவே, அதைக் கருத்தில் பக்கா சேஃப்டி அம்சங்களுடனான தொழில்நுட்பத்தில் அந்தக் கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.
இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








