செவர்லே போல்ட் மின்சார கார் அறிமுகம்- படங்களுடன் தகவல்கள்!
அமெரிக்காவில் நடந்து வரும் நுகர்வோர் மின்னணு சாதன கண்காட்சியில்[CES], புதிய செவர்லே போல்ட் மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த புதிய காரின் மிக முக்கிய அம்சமாக, பேட்டரியில் இருக்கும் சார்ஜ் மூலமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதை துல்லியமாக சொல்லிவிடும். அதாவது, ஓட்டும் முறை, கால நிலை ஆகியவற்றை வைத்து துல்லியமாக கணக்கிட்டு கூறும்.
இந்த காரில் இன்டர்நெட் வசதியை தரும் வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனம் அளிக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, விரைவான இன்டர்நெட் சேவையை காரில் பயணிப்பவர்கள் எளிதாக பெற முடியும். இந்த காரில் 10.2 இன்ச் மைலிங்க் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ரிவர்ஸ் எடுக்கும்போது காரின் பின்புறம் இருக்கும் பகுதிகளை தெளிவாக காட்டும் ரியர் வியூ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஸ்டார்ட் செய்யும் வசதி உள்ளது. காரில் ஏறுவதற்கு முன்பாகவே, ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. வாகனத்தின் சார்ஜ் நிலை, வரைபட தகவல், சர்வீஸ் அட்டவணை உள்ளிட்ட தகவல்களை எளிதாக பெற முடியும்.
இந்த காரில், சார்ஜ் விரயத்தை தவிர்த்து செல்வதற்கான சரியான வழித்தடங்களை காட்டும் நிகழ்நேர வரைபட தகவல் வழங்கும் வசதியும் உண்டு. டெட்ராய்ட் அருகிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓரியான் ஆலையில் உள்ள பிரத்யேக உற்பத்தி பிரிவில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த புதிய மின்சார கார் 30,000 அமெரிக்க டாலர்கள் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மின்சார காரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications














