கொல்லம் ஷோரூமில் ஒரே நேரத்தில் 50 டட்சன் ரெடி கோ கார்கள் டெலிவிரி!
மொத்த கார் விற்பனையில் ஏ-செக்மெண்ட் கார்களை வாங்கும் நடுத்தர மக்களின் பங்கு அதிமுக்கியமானது. விற்பனையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஏ-செக்மெண்ட் கார்கள்தான்.
ரூ.4 லட்சத்துக்குள் அதன் விலை இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த மாடல் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதில் மாருதி ஆல்ட்டோ 800, ரெனால்ட் க்விட், ஹுண்டாய் இயான் ஆகிய மாடல்கள் முன்னணியில் இருக்கின்றன. அதில் சமீபத்தில் களமிறங்கி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் மாடல் டட்சன் ரெடி கோ.

கொல்லம் நிசான்- டட்சன் ஷோ ரூமில் இருந்து ஒரே நாளில் 50 ரெடி கோ கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி. அறிமுகமான ஒரு சில தினங்களுக்குள்ளேயே அதன் விற்பனை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருப்பது டட்சன் நிறுவனத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொல்லம் காவல் துறை உயரதிகாரி விஸ்வநாதன் 50 வாடிக்கையாளர்களுக்கு சாவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிஸான் டீலர் ஷபீன் முகமது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிஸான் - டட்சன் சார்பில் இந்தியா முழுக்க தற்போது 274 விற்பனை மையங்களும், சேவை மையங்களும் உள்ளன. அதை 300-க்கும் மேல் உயர்த்த அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரெடி கோ மாடலின் டிசைன் எஸ்யூவி ரக வடிவமைப்பில் இருப்பது மக்களைக் கவர்ந்துள்ளது. 799 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார், 53 பிஎச்பி திறன், 72 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 கியர்கள் உள்ளன.
உடைமைகளை எடுத்துச் செல்லும் பூட்ஸ்பேஸ் வசதி ரெடி கோவில் 222 லிட்டராக உள்ளது.
கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடையேயான இடைவெளி 185 மில்லி மீட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், சைல்ட் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை ரெடி கோ மாடலில் உள்ளன.
ரூ.2.43 லட்சத்திலிருந்து இதன் விலை தொடங்குகிறது. மைலேஜ் லிட்டருக்கு 25.17 கி.மீ கொடுக்கும் என டட்சன் நிறுவனம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. ஆல்ட்டோ, க்விட்டைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரெடி கோ முன்னேறுமா? என்ற கேள்விக்கான விடை அந்த மாடலின் செயல்திறனில் அடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








