விரைவில் வருகிறது டட்சன் ரெடிகோ பட்ஜெட் கார்... ரெனோ க்விட் சாம்ராஜ்யத்தை உடைக்குமா?
ரெனோ நிறுவனத்துக்கு க்விட் கார் கேம் சேஞ்சர் மாடலாகியது போன்று, நிசான் நிறுவனத்திற்கு டட்சன் ரெடி-கோ கார் கேம் சேஞ்சர் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் நிலை மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டட்சன் ரெடி-கோ காரின் சாலை சோதனை ஓட்டங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன. எனவே, விரைவில் தயாரிப்பு நிலை மாடலாக உருவெடுக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.

பிளாட்ஃபார்ம்
ரெனோ க்விட் கார் தயாரான அதே CMF-A பிளாட்ஃபார்மில்தான் டட்சன் ரெடி-கோ காரும் தயாராகி உள்ளது. ஆனால், டிசைனில் இரு மாடல்களும் வெவ்வேறு தாத்பரியங்களை கொண்டதாக மாற்றப்பட்டு இருக்கிறது.

எஞ்சின்
ரெனோ க்விட் கார் 800சிசி எஞ்சினுடன் விற்பனையாகி வருகிறது. விரைவில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆனால், டட்சன் ரெடிகோ காரில் 3 சிலிண்டர்களுடன் கூடிய 1.2 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை
ரெனோ க்விட் காரைவிட சற்று கூடுதல் விலை கொண்ட மாடலாக டட்சன் ரெடிகோ இருக்கும். அதாவது, ரூ.3.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி
சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள ரெனோ- நிசான் கூட்டணியின் கார் ஆலையில்தான் இந்த புதிய டட்சன் ரெடிகோ காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

அறிமுகம் எப்போது?
இந்த ஆண்டு மத்தியில் டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு சில மாதங்களில் இதன் தயாரிப்பு நிலை மாடலை எதிர்பார்க்கலாம்.

நம்பிக்கை
ரெனோ க்விட் காருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு, தனது ரெடிகோ காருக்கும் கிடைக்கும் என நிசான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், ரெனோ க்விட் காருக்கு காத்திருப்பு காலம் நீண்டிருக்கும் நிலையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்று க்விட்டை விட்டு டட்சன் ரெடிகோ காருக்கு வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








