டெல்லியில் டூ வீலர்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வர அரசு திட்டம்!

By Saravana

டெல்லியில், காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை வாகனங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒற்றைப்படை எண் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளிலும் இயக்குவதற்கான இந்த திட்டம் 15 நாட்களுக்கு சோதனை முறையில் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு

காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும். பெண் ஓட்டுனர்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், விஐபி.,களின் வாகனங்கள், இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் கட்டமாக விதி தளர்வுகளில் மாற்றம் செய்ய டெல்லி அரசு திட்டமிட்டிருக்கிறது. அதாவது, பெண் ஓட்டுனர்கள், இருசக்கர வாகனங்களுக்கும் இந்த ஒற்றைப்படை, இரட்டைப்படை ஃபார்முலாவை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

இதுகுறித்து கோபால் ராய் கூறுகையில்," நேற்று அமலுக்கு கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஃபார்முலாவை தாமாக முன்வந்து கடைபிடித்ததாக பல பெண்கள் தொலைபேசியில் தெரிவித்தனர். இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம்.

இதனிடையே, வாகனங்களுக்கான இந்த கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் விதி தளர்வுகளில் சிலவற்றை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதாவது, டெல்லியில் இருக்கும் 92 லட்சம் வாகனங்களில் 50 லட்சம் வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

டிரக்குகளுக்கு அடுத்து, காற்று மாசுபாட்டை அதிகம் ஏற்படுத்துவதில் இருசக்கர வாகனங்கள் இரண்டாமிடம் வகிக்கின்றன. வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டில் இருசக்கர வாகனங்களின் பங்கு 32 சதவீதம். தனியார் வாகனங்கள் மூலமாக 22 சதவீதம் மாசு ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தற்போது டூ வீலர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விலக்கை நீக்கிவிட்டு, ஒற்றைப்படை, இரட்டைப்படை ஃபார்முலாவிற்குள் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதேநேரத்தில், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம்.

போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்தும் அளிப்போம். வரும் 15ந் தேதிக்கு பின்னர் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்," என்று கூறினார்.

டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை ஃபார்முலாவில் இருந்து பெண்கள் ஓட்டி வரும் தனியார் வாகனங்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் விலக்கு அளித்தது குறித்து டெல்லி உயர்நீதிமன்றமும் வினவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
A largely trouble-free first day of the odd-even trial has set the government thinking of the next phase of the plan one which could do away with the exemption to two-wheelers and women drivers, a concession questioned by the Delhi high court as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X