ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் அறிமுகமானது - முழு விபரம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் இந்த காரை ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன்னர் அறிமுகம் செய்தது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் பாரம்பரியத்திற்கும், தொழில்நுட்ப வல்லமைக்கும் சாட்சியாக விளங்கும் மாடல்களில் ஒன்றான ஃபோர்டு மஸ்டாங் கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரத்யேக ரகம்
விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் ரக கார்களுடன் போட்டி போட்டாலும், இது பிரத்யேகமான மஸில் ரகத்தை சேர்ந்தது. அமெரிக்காவின் பிரபலமான இந்த மஸில் ரகத்தை சேரந்த இந்த கார் தற்போது இந்தியாவிலும் தனது பராக்கிரமங்களை காட்ட வருகை தர இருக்கிறது.

பாரம்பரியம்...
1964ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் பல தலைமுறைகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பொன்விழாவையொட்டி வெளியிடப்பட்ட, 6ம் தலைமுறை மாடல்தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வலது பக்க டிரைவிங்
பொன்விழா கண்டு விட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் 50 ஆண்டுகளாக இடதுபக்க டிரைவிங் வசதி கொண்டதாகவே விற்பனை செய்யப்பட்டது. தற்போது வலது பக்க டிரைவிங் வசதியுடன் மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பிளாட்ஃபார்ம்
இந்தியா வந்திருக்கும் புதிய ஃபோர்டு மஸ்டாங் கார், இரண்டாம் தலைமுறை ஃபால்கன் காரின் அடிப்பைடயில் வடிவமைக்கப்பட்டது.

எஞ்சின்
ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் ஆப்ஷனில் வருகிறது. இந்த எஞ்சின் 435 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கும். மேலும், பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். சர்வதேச அளவில், 3.7 லிட்டர் எஞ்சின் மற்றும் 2.3 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய சஸ்பென்ஷன்
முதல்முறையாக ஃபோர்டு மஸ்டாங் காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை வெளிவந்த மஸ்டாங் கார்களிலேயே இதுதான் மிகச்சிறப்பாக கையாளுமை கொண்டதாக இருக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்
எல்இடி விளக்குகளுடன் கொண்ட எச்ஐடி ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், வளைவுகளில் கார் திரும்பும்போது ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத இடத்தில் வரும் வாகனங்கள் பற்றி எச்சரிக்கும் பிளைன்ட் ஸ்பாட் இன்பர்மேஷன் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர், முன்புறத்திற்கான டியூவல் ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக் மற்றும் முழங்கால்களை பாதுகாக்கும் நீ ஏர்பேக் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த காரில் 12 ஸ்பீக்கர்கள், 8 இன்ச் சப் ஊஃபர் கொண்ட 390 வாட் ஷேக்கர் புரோ ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. 4.2 இன்ச் அளவுடைய திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் சிஸ்டம் உள்ளது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன. டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது.

இறக்குமதி
இந்தியாவில், புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

விலை
ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராண்டு மதிப்பு
விற்பனை எண்ணிக்கை ஒரு பொருட்டாக பார்க்காமல், ஃபோர்டு பிராண்டு மதிப்பை உயர்த்துவதற்கான மாடலாகவே பார்க்கப்படும்.


Click it and Unblock the Notifications








