மின்சார வாகனங்களுக்காக ரூ.500 கோடியில் சிறப்பு மானியத் திட்டம்!

Written By:

மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை மதிப்பிலான சிறப்பு மானிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களால் வெளியிடப்படும் நச்சுப் புகையால் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, பெரு நகரங்களில் காற்று மாசுபாடு அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. இதையடுத்து, மாற்று எரிசக்தி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

மின்சார கார்
 

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பொது பட்ஜெட்டில், மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிப்பதற்காக, சிறப்பு சலுகைத் திட்டம் ஒன்றையும் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை மத்திய பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான FAME என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில், கூடுதலாக பெரும் நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்திருக்கிறார். இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி இரு பிரிவாக செலவிடப்படும். மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அளிப்பதற்கு 50 சதவீதமும், மின்சார வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 50 சதவீத நிதியும் செலவிடப்படும்.

இந்த திட்டத்தின் மூலமாக, மின்சார வாகன விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 35,000 மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், அடுத்த நிதி ஆண்டில் ஒரு லட்சம் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவதற்கு இலக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தால் மின்சார கார் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தின் பயனாக, இந்த ஆண்டில் புதிய மின்சார வாகனங்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா வெரிட்டோ கார் அறிமுகம் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Latest Photos