சென்னை அருகே ஆட்டோ ஹப் திறப்பு- கார் நிறுவனங்கள் மகிழ்ச்சி

Written By:

கடந்த வாரம் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ரயில் ஆட்டோ ஹப் வாலாஜாபாத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆட்டோ ஹப்பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

கார்களை ரயில் மூலமாக அனுப்புவதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த புதிய ரயில் ஆட்டோ ஹப் பற்றி சாதக அம்சங்களையும், ரயில்வே துறையின் திட்டங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

ஶ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில், மற்றும் ஒரகடம் பகுதிகளில் செயல்படும் ஹூண்டாய், ஃபோர்டு, நிசான், ரெனோ உள்ளிட்ட பல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாலாஜாபாத் ரயில் முனையம் மிக அருகாமையில் அமைந்துள்ளது. இதன்மூலமாக, எளிதாக கார்களை அனுப்புவதற்கு வசதியும், போக்குவரத்து நெரிசலும் குறையும்.

ஒரு மில்லியன் கார்கள்

ஒரு மில்லியன் கார்கள்

சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படும் கார் உள்ளிட்ட வாகன தயாரிப்பு முலமாக ஆண்டுதோறும் ஒரு மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 35 சதவீத கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள வாகனங்கள் உள்நாட்டில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

ரயில் மூலமாக...

ரயில் மூலமாக...

தற்போது பெரும்பாலும் சாலை மார்க்கமாகவும், தவிர, கப்பல் போக்குவரத்து மூலமாகவும் கார்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ரயில் முனையம் மூலமாக அதிக அளவில் கார்களை அனுப்ப முடியும். முதல்கட்டமாக சென்னை- டெல்லி வழித்தடத்தில் இந்த கார் அனுப்பும் சேவை வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, வட மாநிலங்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் அனுப்ப வழி பிறந்துள்ளது.

இரட்டைப் பயன்

இரட்டைப் பயன்

கார்களை அனுப்புவதற்கு மட்டுமின்றி, ஹரியானா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கார்களை வாலாஜாபாத் முனையத்திற்கு கொண்டு வர முடியும். அங்கிருந்து பாண்டிச்சேரி, கர்நாடாக மற்றும் ஆந்திராவில் உள்ள டீலர்களுக்கு அனுப்பும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

டாடா, ஹோண்டா கார்கள்

டாடா, ஹோண்டா கார்கள்

சென்னையிலுள்ள திருவள்ளூர் முனையத்தை பயன்படுத்தி வரும் ஹூண்டாய் நிறுவனம் வாலாஜாபாத் முனையத்திலிருந்து இனி கார்களை அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளது. அதேபோன்று, டாடா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் கார்களை வாலாஜாபாத் முனையம் வழியாக தென் மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளன.

சாலை கட்டமைப்பு வசதி

சாலை கட்டமைப்பு வசதி

வாலாஜாபாத் முனையத்திற்கு கார்களை கொண்டு வருவதும், அங்கு வந்து இறங்கும் கார்களை எளிதாக அனுப்புவதற்கு வசதியாக 4 வழி மற்றும் 6 வழிச் சாலை கட்டமைப்பு வசதியும் கார் நிறுவனங்களுக்கு சாதமாக அமைந்துள்ளன.

பரப்பளவு

பரப்பளவு

வாலாஜாபாத் ரயில் ஆட்டோ ஹப் 5,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அதிகபட்சமாக 300 கார்களை இங்கு கையாள முடியும். அடுத்த 4 மாதங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் முடிவடைந்தால், ஒரேநேரத்தில் 800 முதல் 1000 கார்களை வாலாஜாபாத் முனையம் கையாளும் என்று தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

 தனி வழித்தடம்

தனி வழித்தடம்

சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு பிரத்யேக சரக்குப் பாதை அமைக்கவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரும்பட்சத்தில் சிறப்பான சரக்கு ரயில் போக்குவரத்து வசதியை சென்னை பெறும் என்பதோடு, வாகன நிறுவனங்கள் அதிக அளவில் சென்னையை நோக்கி படையெடுக்கும் வாய்ப்பும் உள்ளது.

துறைமுகத்திற்கும்...

துறைமுகத்திற்கும்...

எண்ணூர் துறைமுகத்திற்கும் கார்களை ரயில் மூலமாக அனுப்புவதற்கான ஒப்பந்தங்களை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கையாளும் நிறுவனம்

கையாளும் நிறுவனம்

ஏபிஎல் லாஜிஸ்டிக்ஸ் - வாஸ்கோர் ஆட்டோமோட்டிவ் கூட்டணி நிறுவனத்துடன் இணைந்து இந்த கார்களை அனுப்பும் சரக்கு போக்குவரத்து திட்டத்தை ரயில்வே செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
English summary
Indian Railways has opened the country's first rail auto hub at Walajabad near Chennai.
Story first published: Thursday, March 3, 2016, 18:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark