புதிய ரெனோ டஸ்ட்டர் மாடல் இப்படித்தான் இருக்குமா?

Written By: Krishna

டஸ்டர்.... எஸ்யூவி மார்க்கெட்டில் தனி இடத்தைப் பிடித்த வெற்றிகரமான மாடல் இது. அந்த காரின் வடிவமைப்பிலும், தோற்றத்திலும், வசதிகளிலும் சில மாறுதல்களைச் செய்ய நினைத்த அந்நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய டஸ்டர் மாடலை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதற்கு நடுவே, ரோமானியாவைச் சேர்ந்த டேசியா நிறுவனம் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதன் துணை நிறுவனமான ரெனால்ட் ஆகியவற்றின் சார்பில் மேம்படுத்தப்பட்ட டேசியா டஸ்டர் மாடல் அண்மையில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Duster

டஸ்ரைக் காட்டிலும் கூடுதலான பல சிறப்பம்சங்கள் இந்த புதிய மாடலில் உள்ளன. ஒருவேளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய டஸ்டர் மாடலிலும் இதே அம்சங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் டேசியோ டஸ்டரில் உள்ள முக்கிய சிறப்புகளைப் பார்க்கலாம்...

டேசியா டஸ்டரின் முன்பக்க வடிவமைப்பு டஸ்டரில் இருந்து மாறுபட்டுள்ளது. முகப்பு விளக்குள் சதுர வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரில்லும் டஸ்டர் மாடலைப் போல அல்லாமல் வேறு மாடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கிரில் மற்றும் குரோம் கிட்டத்தட்ட க்விட் மாடலை நினைவுபடுத்துகிறது. கிரில் பகுதிக்கு கீழேயே ஏர்-டேம் வடிவமைக்கப்பட்டிருப்பது புதிய முயற்சி. இது பார்க்க மாறுபட்ட தோற்றத்தைத் தருகிறது.

Duster Facelift

டேசியா டஸ்டர் மாடலின் பின்பகுதியை எடுத்துக் கொண்டால், அதிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெய்ல் லேம்ப் எனப்படும் பிற்பகுதி விளக்குகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

வண்டியின் உள்புறத்திலும் கூடுதலாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேஷ் போர்டு உள்ளிட்டவை நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வடிவமைப்பு காரின் உள்ளே கூடுதலான தோற்றப் பொழிவைக் கொடுக்கின்றன.

வீல்களைப் பொருத்தவரை 16 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட டேசியோ டஸ்டரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 125 பிஎச்பி மற்றும் 205 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட எஞ்சின் இது. 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ரெனால்ட் டேசியா டஸ்டர் தற்போது ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்தியாவுக்கு வரவுள்ள மேம்படுத்தப்பட்ட டஸ்டர் மாடலிலும் இதே அம்சங்கள் நிறைந்திருந்தால், எஸ்யூவி மார்க்கெட்டின் போட்டிக் களத்தில் அனல் பறக்க வாய்ப்புள்ளது.

English summary
புதிய ரெனோ டஸ்ட்டர் மாடல் இப்படித்தான் இருக்குமா?

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark