ரூ.174 கோடியில் ஜாகுவாரின் சிறப்பு வாகன வடிவமைப்பு மையம்...!!

Written By: Krishna

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குமாயுன் என்ற பகுதியில் ஆட்கொல்லி சிறுத்தை ஒன்று கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற பாரபட்சமெல்லாம் அதற்கு கிடையாது.

ஆள் அகப்பட்டுவிட்டால் அவ்வளவுதான், பீஸ் பீஸாக்கி பிரியாணி சமைத்துவிடும். அப்படிப்பட்ட சிம்மசொப்பனமாக விளங்கிய சிறுத்தையை வீழ்த்த பிரபல வேட்டைக்காரராக இருந்த ஜிம் கார்பெட் செல்கிறார். எத்தனையோ வேங்கைகளையும், வங்கப் புலிகளையும் வீழ்த்திய அனுபவம் இருந்தாலும், இந்த சிறுத்தை அவருக்கு தண்ணி காட்டியது.

வாகன வடிவமைப்பு மையம்

அதனுடைய வேகமும், சமயோஜித செயல்பாடுகளும் ஜிம் கார்பெட்டை வியக்க வைத்தன. பல நாள் போராட்டத்துக்குப் பிறகு, பல முயற்சிகளுக்குப் பிறகு சிறுத்தையை சுட்டுக் கொல்கிறார் அவர். ஒரு சிறுத்தையின் பலம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் சிறிய உதாரணம்.

பொதுவாகவே சிறுத்தைகள் அசுர ஆற்றல் கொண்டவை. ஒரு நிறுவனத்துக்கோ, பொருளுக்கோ அல்லது மனிதருக்கோ சிறுத்தையின் பெயரை வைக்க வேண்டுமானால், அதைப் போன்ற ஆற்றல் கொண்டு அவை இருக்க வேண்டும். இல்லையென்றால் பார்ப்பவர்கள் சிரித்து விடுவார்கள்.

ஆனால், ஜாகுவார் நிறுவனத்தைப் பொருத்தவரை இன்றளவும் சீறிப் பாயும் சிறுத்தையைப் போலவே அதன் செயல்பாடுகள் இருக்கின்றன.

விற்பனையில் உறுதியான இடத்தையும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த நிறுவனம், தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

சிறப்பு வாகன தொழில்நுட்ப மையத்தை (ஸ்பெஷல் வெய்க்கிள் ஆபரேஷன்) பிரிட்டனில் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை ஜரூராக முடுக்கி விட்டுள்ளது ஜாகுவார்.

ரூ.174 கோடி மதிப்பீட்டில் 20,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த மையம் ஃபார்முலா - 1 கார்களை அசெம்பிளி செய்யும் இடத்தைப் போல கட்டமைப்பை கொண்டதாம்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர், எஸ்வி ஆட்டோபயாகிராபி, எஃப்-டைப் எஸ்விஆர் ஆகிய மாடல் கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.

வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விரும்பிய வகையில் ஜாகுவார் கார்களில் சிறிய மாற்றங்களைச் செய்யவும், தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் இந்த மையத்தை அணுகலாம்.

இதற்காக பிரத்யேக பயிற்சி பெற்ற 200 தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த மையத்தில் உள்ளனர்.

அவர்கள் அசால்ட்டாக ஜாகுவார் காரை மேலும் மெருகேற்றியும், தொழில்நுட்ப உதவிகளையும் தந்து விடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறது அந்நிறுவனம்.

பெயிண்டிங் பிரிவு, வடிவமைப்புப் பிரிவு, உற்பத்தி அலகு என பல செக்ஷன்கள் இங்கு இயங்கப் போகின்றன. இதைத் தவிர வாடிக்கையாளர்களுக்கு கார்களை வழங்கும் பிரசென்டேஷன் ஜோனும் இந்த மையத்தில் உள்ளது.

சாதாரணமாக ஜாகுவாரை சாலையில் ஓட்டிச் சென்றாலே அனைவரது கவனமும் ஈர்க்கப்பட்டு விடும். இப்போது மெருகேற்றி, தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட கஸ்டமைஸ்டு ஜாகுவார் என்றால் அதன் ஈர்ப்பு இன்னும் கூடிவிடும்.

கம்பீரமான ஒரு சிறுத்தை, காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு, டாட்டூ குத்தி நடந்து வந்தால் எப்படியிருக்குமோ? அப்படி ஒரு அனுபவம் வாய்க்கப்போகிறது அனைவருக்கும்.

English summary
Jaguar Land Rover Opens Performance Division With New Technical Centre.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark