பினின்ஃபரீனா பிராண்டில் எலக்ட்ரிக் சூப்பர் காரை களமிறக்கும் மஹிந்திரா!
டெஸ்லா நிறுவனத்துக்கு போட்டியாக, பினின்ஃபரீனா பிராண்டில் புதிய எலக்ட்ரிக் சூப்பர் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது மஹிந்திரா நிறுவனம். கார் வடிவமைப்பில் உலக புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்தை மஹிந்திரா சமீபத்தில் கையகப்படுத்தியது.
இந்தநிலையில், பினின்ஃபரீனா பிராண்டிலேயே புதிய சூப்பர் காரை வெளியிட மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதற்கான, ஆரம்பக் கட்ட ஆலோசனை பணிகளில் மஹிந்திராவும், பினின்ஃபரீனாவும் ஈடுபட்டுள்ளது.

சொந்தமாக கார் தயாரிப்பு
லண்டனில் நடந்த எலக்ட்ரிக் ஃபார்முலா- ஒன் கார்களுக்கான போட்டியின்போது வருகை தந்திருந்த, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா," இனி பிற கார் நிறுவனங்களுக்கு கார் வடிவமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஏற்கும் நிறுவனமாக பினின்ஃபரீனா இருக்காது. எங்களிடம் வந்தவகையில், அந்த நிறுவனம் தனி கார் பிராண்டாக உருவெடுப்பதுடன், சொந்தமாக காரை வடிவமைத்து வெளியிடும். அந்த கார் இதுவரை அந்த நிறுவனம் வெளியிடாத அளவுக்கு சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.

ஹைட்ரஜன் கார்
இந்த தகவலை ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருக்கும் நிலையில், பினின்ஃபரீனாவுக்கு எலக்ட்ரிக் கார் வடிவமைப்பில் சற்று அனுபவம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த மோட்டார் ஷோவில் எச்2 என்ற ஸ்போர்ட்ஸ் காரை காட்சிக்கு அறிமுகம் செய்தது. இதனை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் சிஇஓ சில்வியோ அங்கோரி தெரிவித்திருந்தார்.

அடித்தளம்
இந்த நிலையில், எச்2 காரை அடித்தளமாக கொண்டு புதிய எலக்ட்ரிக் சூப்பர் காரை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கணிக்கின்றன. இதற்காக, பல மில்லியன் யூரோக்களை கொட்டி முதலீடு செய்யவும் மஹிந்திரா தயாராக இருப்பதாகவும், 300 முதல் 350 என்ற எண்ணிக்கையில், புதிய பணியாளர்களை நியமிக்கும் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்2 சிறப்பு
எச்2 ஸ்போர்ட்ஸ் கார் ஹைட்ரஜன் எரிபொருளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக இயங்கும் தொழில்நுட்பம் கொண்டது. இந்த கார் 0 - 96 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 289 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

மாசு இருக்காது...
பினின்ஃபரீனா பிராண்டில் உருவாக்கப்பட இருக்கும் புதிய சூப்பர் கார் துளி கூட மாசு வெளிப்படுத்தாத எதிர்காலத்துக்கான ஸ்போர்ட்ஸ் வகையறா காராக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மஹிந்திரா உறுதி
ஐரோப்பிய மார்கெட்டில் மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களுடன் மஹிந்திரா களமிறங்கி இருக்கிறது. அதாவது, அங்கு அதிக பங்களிப்பை கொண்ட முக்கிய பிராண்டாக தன்னை உயர்த்திக் கொள்ளும் முடிவோடு செயல்பட்டு வருகிறது. பினின்ஃபரீனா மட்டுமின்றி, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனையையும், உற்பத்தியையும் ஐரோப்பாவில் அதிகரிக்கவும் முடிவு செய்திருக்கிறது.

டெஸ்லாவுக்கு போட்டி
டெஸ்லா கார்கள் நடைமுறை பயன்பாட்டுக்கு சிறந்ததாக இருக்கும் நிலையில், டெஸ்லா கார்களை பயன்படுத்துபவர்களை எங்களது புதிய எலக்ட்ரிக் சூப்பர் கார் நிச்சயம் கவரும் என்று பினின்ஃபரீனா சிஇஓ அடித்து கூறுகிறார். டெஸ்லாவுக்கு மஹிந்திரா சவாலாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








