அனைத்து கார்களிலும் பெட்ரோல் மாடலை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா!
இந்தியாவின் நம்பகத்துக்குரிய கார் நிறுவனங்களில் முதன்மையான வரிசையில் இருப்பது மஹிந்திரா அண்டு மஹிந்திரா. ஸ்கார்பியோ, பொலிரியோ, எக்ஸ்யூவி 500, கேயூவி 100 என அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய பல மாடல்கள் மார்க்கெட்டில் செம ஹிட்.
இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது மஹிந்திரா. புது மாடல் ஏதேனும் சந்தைக்கு வரப்போகிறதா என்று கேட்க வேண்டாம். ஏனென்றால், மஹிந்திரா நிறுவனத்தில் இனி வரப்போகும் அனைத்துமே புதிய மாடல்கள்தான். புரியவில்லையா... வரும் 2018-ஆம் ஆண்டு முதல் மஹிந்திரா நி்றுவனத்தின் கார்கள் அனைத்திலுமே பெட்ரோல் மாடல்கள் களமிறக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்த நீண்ட காலமாகவே மஹிந்திரா நிறுவனம் பரிசீலித்து வந்ததாம். இப்போது தில்லியில் 2000 சிசி திறனுக்கு அதிகமான டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையைக் கருத்தில் கொண்டு, அந்தத் திட்டத்தை விரைவில் அமலாக்க வியூகம் வகுத்து வருகிறது மஹிந்திரா.

இதற்கு நடுவே தில்லியில் 2.0 லிட்டர் திறனுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விலக்கியுள்ளது. கூடுதலாக வரி செலுத்தினால், அத்தகைய வாகனங்களுக்குத் தடை இல்லை என்றும் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் பெட்ரோல் மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாக பரிசீலித்து வருவதால், தனது முடிவை தற்போது அந்நிறுவனம் மாற்றி்க் கொள்ளாது என நம்பலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாக மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பவண் கோயங்கா கூறுகையில், 1.5 லிட்டர் திறன் கொண்ட பெட்ரோல் மாடல்களை வடிவமைத்து வருகிறோம். அடுத்து வரும் ஆண்டுகளில் 1.2 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும் 2.0 திறனுடைய பெட்ரோல் கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்றார்.
அண்மையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கேயூவி 100 எஸ்யூவி காரின் விற்பனையை எடுத்துப் பார்த்தால், அதிலும் பெட்ரோல் மாடல்கள் எதிர்பார்த்தைவிடக் கூடுதலாக விற்பனையாகியுள்ளதாம். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு எரிபொருளின் விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதால், பெரும்பாலான வாடிக்கையாளர்களின் சாய்ஸ் இப்போது பெட்ரோல் எஞ்சின் மாடல் கார்களாகவே உள்ளன.
இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொண்டுதான் மஹிந்திரா நிறுவனம், இத்தகைய முடிவை எடுத்துள்ளது. எஞ்சின் திறன் மட்டுமன்றி கார்களின் வேறு சில சிறப்பம்சங்களிலும் மாற்றங்களை தரப்போகிறதா மஹிந்திரா நிறுவனம்? என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








