மாருதி இக்னிஸ் அறிமுகமாவதில் தாமதம்... விட்டாரா பிரெஸ்ஸா காரணமா?

Written By: Krishna

ஒரு சில கார்களுக்கு எதிர்பார்ப்பும், ஆதரவும் அளவுக்கு அதிமாகக் குவிந்தால் புக்கிங்கின் அளவும் அதே அளவு உயரும் என்பதில் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு நிலைதான் மாருதி நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. பலேனோ மற்றும் விட்டாரா பிரேஸா ஆகிய மாடல்களுக்கு அதிக அளவில் புக்கிங்குகள் வருவதால் திக்கு முக்காடிப் போயிருக்கிறது மாருதி. இரு மாடல்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புக்கிங்குகள் வந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தோஷமான விஷயம்தானே என நினைக்காதீர்கள்.

இதற்குப் பின்னால், ஆட்டோ மொபைல் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது மாருதி. அதாவது விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இக்னிஸ் மாடல், மார்க்கெட்டுக்கு வருவது தாமதமாகும் என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

மாருதி இக்னிஸ்

அதற்குக் காரணம் விட்டாரா பிரேஸா மற்றும் இக்னிஸ் மாடல்களுக்கு வந்த புக்கிங்குகள்தானாம்.

ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான கார்கள் டெலிவரி கொடுக்காமல் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு மாடலை அறிமுகப்படுத்தினால், அதற்கு வரும் புக்கிங்குகளையும் சமாளிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறதாம் மாருதி நிறுவனம்.

இதனால், அடுத்த ஆண்டு முற்பாதியில்தான் புதிய இக்னிஸ் மாடல் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. இது ஆட்டோ மொபைல் ஆர்வலர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டில் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் மாருதி இக்னிஸ் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டபோதே, பரவலான வரவேற்பை அது பெற்றது.

கிராஸ்ஓவர் யுடிலிட்டி வெய்க்கில் எனப்படும் சியூவி ரக கார்களில் தற்போது மகிந்திரா கேயூவி 100 மாடல் மட்டுமே சந்தையில் உள்ளது. அந்த மாடல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக களம் காணவுள்ள மாடல்தான் மாருதி இக்னிஸ்.

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இரு வகையில் இக்னிஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 115 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது.

இந்த இரண்டு மாடல்களிலும் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இதைத்தவிர, 258 லிட்டர் கொள்ளளவு வரையில் உடைமைகளை வைத்துச் செல்வதற்கான பூட் ஸ்பேஸ் வசதி இக்னிஸில் உள்ளது (பூட்ஸ்பேஸை 415 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு).

மேலும், ஏர்பேக், 4 பவர் விண்டோஸ், யுஎஸ்பி மற்றும் புளூடூத் இணைப்பு வசதி, உள்ளிட்டவையும் இக்னிஸில் உள்ளன. மைலேஜைப் பொருத்தவரை, பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று மாருதி உத்தரவாதம் அளிக்கிறது.

விலையை எடுத்துக் கொண்டால், ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை மாருதி இக்னிஸ் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Maruti Suzuki Ignis Launch Postponed; Vitara Brezza The Culprit?
Please Wait while comments are loading...

Latest Photos