டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ரிலீசாகும் 3 முத்தான மாருதி கார்கள்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் புத்தம் புது கார் மாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல்கள் குறித்த விபரங்களை பல முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அதேவேளை, சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் கமுக்கமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமும், மக்களின் அபிமானத்தை பெற்ற நிறுவனமாகவும் விளங்கும் மாருதி சுஸுகி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய இருக்கும் 3 முத்தான கார் மாடல்கள் குறித்தத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. மாருதி இக்னிஸ்
எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர்களுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, இக்னிஸ் என்ற ஓர் புத்தம் புதிய மினி க்ராஸ்ஓவர் ரக காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் டோக்கியோ மோட்டார் ஷோவில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி இந்த புதிய மாடலை காட்சிக்கு வைத்திருந்தது. வரும் பிப்ரவரி 4ந் தேதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த புதிய கார் மஹிந்திரா கேயூவி100 மற்றும் ரெனோ க்விட் போன்ற கார்கள் மீதான மோகத்தை குறைத்து, மாருதி பிரியர்களை வளைக்கும் என நம்பலாம். மாருதியின் ஸ்விஃப்ட், டிசையர் மாடல்களில் செயலாற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அத்துடன், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

02. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
வரும் பிப்ரவரி 3ந் தேதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்கள் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விற்பனையில் சிறிதேனும் உடைத்து விட வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய மாடலை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர, நேரடியாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி300 மாடல்களுடன் போட்டியிடும்.

தொழில்நுட்ப விபரம்
இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக இது விற்பனை செய்யப்படாமல், சாதாரண மாருதி டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, மிக குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எஸ் க்ராஸ் காருக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்து சூடுபட்ட அனுபவத்தை வைத்து இந்த காரின் விலை நிர்ணயத்தில் மாருதி மிக எச்சரிக்கையாக இருக்கும் என நம்பலாம்.

03. மாருதி பலேனோ 'ஆர்எஸ்' !
மாருதியின் புதிய வரவாக வந்து, விற்பனையில் மிகச்சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வரும் மாருதி பலேனோ காரின் கூடுதல் சக்திவாய்ந்த மாடலாக பலேனோ ஆர்எஸ் என்ற புதிய மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்க காத்திருக்கிறது. தோற்றத்திலும், சக்தியிலும் மிரட்டலான ஹேட்ச்பேக் மாடலாக எதிர்பார்க்ப்படும், இதன் டீசரும் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தொழில்நுட்ப விபரம்
இந்த காரில் புத்தம் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக110 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களுக்கு சிறப்பான மாடலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








