சென்னை ரேஸ் டிராக்கில் களம் காண வரும் 'ஜூனியர்' ஷூமேக்கர்!
வரும் 31ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் எம்ஆர்எஃப் சேலஞ்ச் கார் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் முன்னாள் ஃபார்முலா ஒன் சாம்பியனான மைக்கேல் சூமேக்கர் மகன் மிக் சூமேக்கர் பங்கேற்க உள்ளார். மிக் சூமேக்கர் சென்னை வர இருப்பது இந்திய மோட்டார் பந்தய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆவலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபாரமுலா ஒன் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்று, முடிசூடா மன்னனாக விளங்கிய முன்னாள் வீரர் மைக்கேல் சூமேக்கர் பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் பலத்த காயமடைந்து, கோமா நிலைக்கு சென்று திரும்பினார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சோகத்துக்கு ஆறுதல் தரும் வகையில், அவரது மகன் மிக் சூமேக்கர், தந்தை வழியில் தற்போது கார் பந்தய வீரராக உருவெடுத்துள்ளார். தற்போது 16 வயதாகும் மிக் சூமேக்கர், ஃபார்முலா-4 வகை பந்தயங்களில் வேன் அமர் ஃபூட் ரேசிங் அணிக்காக பங்கேற்று வருகிறார்.
இந்தநிலையில், எம்ஆர்எஃப் சேலஞ்ச் பந்தயத்தின் நான்காவது மற்றும் இறுதிச் சுற்று சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டை மோட்டார் பந்தய களத்தில் நடைபெற இருக்கிறது.
இதில், மிக் சூமேக்கர் பங்கேற்க இருக்கிறார். இது மைக்கேல் சூமேக்கர் ரசிகர்களையும், மோட்டார் பந்தய ரசிகர்களின் மத்தியிலும் மகிழ்ச்சியையும், ஆவலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த தருண் ரெட்டியும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்க்கது.


Click it and Unblock the Notifications








