ஐந்தாம் ஆண்டு விழா... ரெனால்ட் கார்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவிப்பு
ரெனால்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதித்து வெற்றிகரமாக 5-ஆம் ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது.
இந்திய மார்க்கெட்டில் களமிறங்கிய 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ரெனால்ட் நிறுவனம் தயாரித்த கார்கள் சென்றடைந்துள்ளன. அதில் பிரம்மாண்ட ஹிட் அடித்தது எஸ்யூவி மாடலான டஸ்டர்.

தற்போது மாருதி ஆல்ட்டோவுக்குப் போட்டியாக க்விட் என்ற காம்பேக்ட் ஹேட்ச்பேக் மாடலை, அதாவது ஏ-செக்மெண்ட் காரை அறிமுகப்படுத்தியது. அந்த மாடலையும் சும்மா சொல்லக் கூடாது.... விற்பனையில், ரவுண்டு கட்டி தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
காலங்காலமாக வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டிருந்த கார் நிறுவனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது ரெனால்ட் நிறுவனம். அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களெல்லாம் விற்பனையில் கொடி நாட்டிய சந்தோஷத்துடன் கூடவே, இந்தியாவில் தடம் பதித்து 5 ஆண்டுகள் ஆன மகிழ்ச்சியும் இணைந்தால் எப்படியிருக்கும்?
அப்படி ஒரு மகிழ்ச்சிப் பூரிப்பில் உள்ள ரெனால்ட் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
ஹேட்ச்பேக் மாடலான பல்ஸ் காருக்கு ரூ.41,000 மதிப்புடைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எக்ஸ்சேஞ்ச் போனஸ் கூடுதலாக ரூ.15 ஆயிரமும், கார்பரேட், பொதுத் துறை நிறுவன போனஸாக ரூ. 6 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதைத் தவிர வெறும் ஒரு ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செடான் ரக மாடலான ஸ்கேலா காருக்கு போனஸ் சலுகைகள் எதையும் ரெனால்ட் நிறுவனம் வழங்கவில்லை. அதேவேளையில் ஒரு ரூபாய்க்கு இன்ஷுரன்ஸ் செய்யும் சலுகை அந்த மாடலுக்கு உண்டு.
எம்யூவி மாடலான லாட்ஜிக்கு பல சலுகைகள் அள்ளி வீசப்பட்டுள்ளன. டெஸ்ட் டிரைவ் செய்பவர்களுக்கு இலவச பரிசுகள் வழங்கப்படுகிறது. இதைத்தவிர அந்த மாடல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 மதிப்புடைய பரிசுக் கூப்பன் தரப்படுகிறது.
கார்ப்பரேட் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கான சலுகைகளும் இந்த மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ரெனால்ட் நிறுவனத்தின் ஹீரோ மாடல் காரான டஸ்டருக்கும் பல்வேறு அதிரடி சலுகைகள் உள்ளன. எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.25,000 வழங்கப்படும் என்றும் ரூ.25,000 மதிப்புடைய பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும் (நிபந்தனைகளின் அடிப்படையில்) என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தச் சலுகைகள் வரும் 31-ஆம் தேதி வரை மட்டுமே உள்ளன. ரெனால்ட் நிறுவனம் வழங்கும் பரிசு மழைக்கு வரவேற்பு இருக்குமா? என்பதை அறிய காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications








