80 சதவீத சாலை விபத்துகளுக்குக் காரணம் லஞ்சம்... அதிர்ச்சிகரமான உண்மை...!!

Written By: Krishna

இந்தியாவில் மட்டும்தான் லஞ்சம், ஊழல் இருக்கிறதா? ஏன் வளர்ந்த நாடுகளில் எல்லாம் இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் கடமையை மீறத்தான் லஞ்சம்... இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்..

இந்தியன் படத்தில் பலத்த கரவொலிகளைப் பெற்ற இந்த வசனத்தை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். அந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், நாட்டின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. ஒரே ஒரு வளர்ச்சி என்னவென்றால், தேசத்தின் மூலை, முடுக்கெல்லாம் லஞ்சம் புரையோடிப் போயுள்ளது என்பதை மத்திய அரசே இப்போது ஒப்புக் கொண்டுள்ளது.

சாலை விபத்து

சாலை பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற பயிலரங்கம் ஒன்றில் பங்கேற்ற மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு விஷயத்தைக் கூறினார். அது, மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல். அதாவது, நாட்டில் நிகழும் 1.5 லட்சம் சாலை விபத்துகளில் பெரும்பாலானவைக்குக் காரணம் ஊழல்தான் என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 80 சதவீத விபத்துகள், திறன் இல்லாத ஓட்டுநர்களாலும், பழுதான வாகனங்களாலும்தான் நேர்கின்றன என்று கூறிய நிதின் கட்கரி, அவ்வாறு எந்த விதமான தகுதியற்ற நபர்களும், வாகனங்களும் சாலையில் அனுமதியுடன் செல்வதற்குப் பின்னால் லஞ்சம்தான் உள்ளது என்பதை பட்டவர்த்தனமாகத் தெரிவித்தார்.

ஆர்டிஓ அலுவலகங்கள்தான் லஞ்சத்தின் ஒட்டுமொத்த தலைமைச் செயலகம் என்பதை இந்த நாடே அறியும். அதன் அடிப்படையில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவ்வாறு கூறியுள்ளார். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால், போக்குவரத்துத் துறையில் வேரூன்றி இருக்கும் ஊழலை அடியோடு ஒழிப்போம் என்று அவர் வாக்குறுதி அளித்தது மட்டுமே. மேலும் ஆர்டிஓ அலுவலகங்களில் வாகன ஓட்டுநர் உரிமங்கள் வழங்கும் நடைமுறையில் 100 சதவீத வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தப் போவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

எது, எப்படியோ இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வராதா? என்றுதான் இந்த ஒட்டுமொத்த தேசமும் விரும்புகிறது. தகுதியில்லாவர்களுக்கு லைசென்ஸும், பழுதடைந்த வாகனங்களுக்கு பதிவு உரிமமும் வழங்குவது, கொடும் கொலைகாரர்களுக்கு அரசு அனுமதியுடன் துப்பாக்கி உரிமம் தருவதற்கு சமம். அதேபோல், லஞ்சத்தின் அவலத்தைப் பற்றி மணிக்கணக்கில் பேசும் மக்கள், அதைத் தரக்கூடாது என்று முதலில் முடிவெடுக்க வேண்டும். அதன் பிறகுதான் அரசு நடவடிக்கைகள் எல்லாம் பலிக்கும்.

English summary
Road Accidents? You Won’t Believe Who Are The Main Contributors.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark