15 ஆண்டு பழமையான கனரக வாகனங்களுக்குத் தடை: நிதியமைச்சர் அறிவுறுத்தல்...

By Meena

இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் மழலைகளுக்கு நுரையீரல் மற்றும் சுவாசக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட சர்வேயில் தெரிவித்துள்ளது.

பள்ளிக்குச் சென்றால் இப்பிரச்னை வந்துவிடுமா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று சிரிக்க வேண்டாம். சாலையில் போகும் புகை கக்கும் வாகனங்களுக்கு நடுவே குழந்தைகள் அன்றாடம் செல்லும் போது சுவாசப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு உள்ளதாம்.

கனரக வாகனங்கள்

விலைமதிப்பற்ற நீரையும், காற்றையும், களங்கப்படுத்துவதில் நாம் கைதேர்ந்தவர்கள். அதனால்தான் சர்வதேச அளவில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பல ஊர்கள் இடம்பெற்று நம்மை கௌரவப்படுத்தியுள்ளன.

சுற்றுச்சூழலின் உயிராக விளங்கும் காற்று மாசடைந்து வருவது தொடர்பாக சமீப காலமாகத்தான் மத்திய அரசு கவலைப்பட்டு வருகிறது. இப்போதாவது அதில் அக்கறை எடுத்துள்ளதே என்று நாம் ஆறுதல் அடையலாம். இப்போது புதிய தகவல் என்னவென்றால், 15 ஆண்டுகள் பழமையான கனரக வாகனங்களை ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப் போகிறது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காற்று மாசடைவதில் 65 சதவீத பங்கு பழமையான கனரக வாகனங்களையே சேரும் என்று வேதனை தெரிவித்தார்.

அவற்றுக்கு உடனடியாகத் தடை விதிப்பதுடன், பழைய வாகனங்களை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பழைய கனரக வாகனங்களை ஒழிக்க முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுதொடர்பான செயல் திட்டக் கொள்கையை உடனடியாக வகுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட அருண் ஜேட்லி, இதுகுறித்து சரக்கு - சேவை வரி கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்தார்.

மேலும், வரி விலக்குகளை அறிவிப்பதற்கு மாற்றாக பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு அதனை ஒழிப்பதற்கு நிதியுதவி வழங்குவது குறித்துப் பேசப் போவதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதை வைத்துப் பார்க்கும்போது, அடுத்த பட்ஜெட்டில் இந்த விவகாரம் தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ மாசுக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்தால் நல்லதுதான்.

Most Read Articles
English summary
Start Scrapping Heavy Vehicles Older Than 15 Years: Finance Minister.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X