மஹிந்திரா கேயூவி100, மாருதி இக்னிஸுக்கு போட்டியாக வரும் டாடா மினி எஸ்யூவி!
எஸ்யூவி கார்களுக்கு உள்ள வரவேற்பை கருதி, அனைத்து ரகங்களிலும் தொடர்ந்து புதிய எஸ்யூவி மாடல்களை கார் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், குறைவான விலையில் எஸ்யூவி மாடல்களை களமிறக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.
மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி வந்த நிலையில், அடுத்து மாருதி இக்னிஸ் கார் வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த இரு மாடல்களையும் குறி வைத்து ஒரு அட்டகாசமான மினி எஸ்யூவி மாடல்களை டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது.

குறியீட்டுப் பெயர்
புதிய மினி எஸ்யூவி மாடலுக்கு எக்ஸ்451 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. டாடா கார்கள் டிசைனில் பல படிகள் முன்னேறி இருப்பதால், போட்டியாளர்களைவிட மிகச்சிறப்பான வடிவமைப்பு கொண்ட மாடலாக இந்த மினி எஸ்யூவி இருக்கும்.

குளோபல் மாடல்
புதிய மினி எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி
அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2018ம் ஆண்டில் இந்த புதிய மினி எஸ்யூவி உற்பத்திக்கு கொண்டு வருவதற்கான திட்டத்துடன் டாடா மோட்டார்ஸ் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் கிடையாது
சில நாட்களுக்கு முன் வெளியான செய்திகளில், எக்ஸ்451 குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் புதிய டாடா கார் ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக கருதப்பட்டது. அதாவது, மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக கருதப்பட்டது. ஆனால், அது தற்போது மினி எஸ்யூவி மாடல் என்பது தெரியவந்துள்ளது.

எப்படி தெரிந்தது?
சமீபத்தில் புதிய மினி எஸ்யூவி மாடலை வடிவமைப்பதற்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் ஆர்டர் செய்துள்ளது. இந்த திட்டத்தில் செயலாற்றும் ஒருவர் இந்த தகவலை மீடியாவுடன் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதம் இருக்காது...
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டாடாவின் புதிய காம்பேக்ட் செடான் கார், ஹெக்ஸா க்ராஸ்ஓவர், நெக்ஸான் எஸ்யூவி மாடல்களை தொடர்ந்து, இந்த புதிய மினி எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த புதிய மினி எஸ்யூவி திட்டத்தை காலம் தாழ்த்தாமல், விரைந்து முடித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரவும் டாடா உறுதி பூண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








