எமனாக மாறிய டெஸ்லா காரின் ஆட்டோ பைலட் வசதி!
புகழ் பெற்ற டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டோ பைலட் என்ற அம்சம் உலக அளவில் ஃபேமஸான ஒன்று. ஸ்டியரிங்கில் கைகளை வைத்து கன்ட்ரோல் செய்வதற்குப் பதிலாக இந்த ஆப்ஷனைத் தேர்வு செய்து விட்டால், அதுவே காரின் கட்டுப்பாட்டை கவனித்துக் கொள்ளும்.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற ஒரு சிறப்பம்சம் என்பதில் மாற்றிமில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வசதியை டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஏர் பேக் எப்படி ஓட்டுநரின் உயிரைப் பாதுகாக்கும் அம்சமோ, அதுபோன்ற பாதுகாப்பை இந்த ஆப்ஷன் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது. அதேவேளையில், ஆட்டோ பைலட் வசதி சோதனை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இரண்டு கைகளையும் ஸ்டீயரிங்கில் இருந்து எடுத்து விட்டு வாகனத்தை ஓட்டுவது பாதுகாப்பானது அல்ல என்று டெஸ்லா நிறுவனம் அப்போதே விளக்கமளித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நெடுஞ்சாலையில் டெஸ்லா எஸ் மாடல் காரை ஆட்டோ பைலட் மோட் ஆப்ஷனில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை ஓட்டியிருக்கிறார்.
அந்த வாகனத்துக்கு முன்னால் பெரிய சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இடது பக்கமாகத் திரும்பியபோது, பின்னால் வந்த டெஸ்லா கார் கட்டுப்பாட்டை இழந்து அதன் மேல் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இதுகுறித்து ஃப்ளோிடா நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதை டெஸ்லா மோட்டார் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்த அந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளது.
என்னதான் பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும், வாகனத்தை இயக்குபவரும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது உயிருக்கே எமனாக முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணம்.


Click it and Unblock the Notifications








