விபத்துகள் நடந்தாலும் ஆட்டோ பைலட் வசதியை திரும்பப் பெறப் போவதில்லை... டெஸ்லா நிறுவனம் அதிரடி அறிவிப்பு...
மேகங்கள் சூழ்ந்து, வானம் கருமையாக காட்சியளிக்கும் நாள்களில் சூரியன் கூட உதிக்காமல் போய் விடலாம். ஆனால், நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் இந்த உலகில் உதிக்கத் தவறுவதில்லை.
அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும். ஆட்டோ மொபைல் பற்றி கேட்க வேண்டியதில்லை. தானாக இயங்கும் வசதிகள் கூட கார்களில் வந்துவிட்டன. ஆனால், அவை முழுமையாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

அப்படி ஒரு அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது அமெரிக்காவின் பிரபல கார் தயாரி்ப்பு நிறுவனமான டெஸ்லா. அந்நிறுவனத்தின் கார்களில் உள்ள ஆட்டோ பைலட் வசதியால்தான் இந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆட்டோ பைலட் வசதியில் டெஸ்லா கார்கள் தானாக இயங்கும் போது தொடர்ச்சியாக அவை விபத்தில் சிக்கிக் கொண்டதே அதற்குக் காரணம்.
அதில் ஒரு உயிரிழப்பும் நேர்ந்தது வாடிக்கையாளர்களின் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துவிட்டது. இதுதொடர்பாக கட்டுரை வெளியிட்ட கன்ஸ்யூமர் ரிபோர்ட்ஸ் என்ற இதழ், டெஸ்லா நிறுவனத்தின் மீது சரமாரியாக விமர்சனக் கணைகளை தொடுத்துள்ளது.
ஆட்டோ பைலட் மோடைத் திரும்பப் பெற வேண்டும். அது முழுமையாக மேம்படுத்தப்படும் வரை அந்த வசதியை தங்களது காரிலிருந்து டெஸ்லா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்த இதழ் பரிந்துரைத்துள்ளது.
இதைத் தவிர, சோதனை அடிப்படையிலான முயற்சிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் இதழ் டெஸ்லா நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
டெஸ்லா நிறுவன கார்களில் உள்ள வசதியை ஆட்டோ பைலட் என்று குறிப்பிடுவதே தவறானது என்று அந்தக் கட்டுரையில் சாடப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் பதில் கூற வேண்டிய நிர்பந்தத்துக்கு டெஸ்லா நிறுவனம் தள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த அந்நிறுவனம், தங்களது கார்களில் உள்ள ஆட்டோ பைலட் மோடை ஒருபோதும் திரும்பப் பெற போவதில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
சுமார் 20 கோடி கிலோ மீட்டர்களுக்கு சோதனை அடிப்படையில் ஆட்டோ பைலட் மோட் இயக்கிப் பார்க்கப்பட்டு, அது பாதுகாப்பானது என்று தெரிந்த பிறகே, அந்த வசதியை மார்க்கெட்டில் நாங்கள் அறிமுகம் செய்தோம் என்று தெரிவித்துள்ளது டெஸ்லா.
அந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், கூறுகையில், ஆட்டோ பைலட் மோடில் கார் இயங்கினாலும், முன்னெச்சரிக்கையாக ஸ்டீயரிங்கின் மேல் கைகளை வைப்பது அவசியம் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
மொத்தத்தில், என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும், மனிதன் தன் கையை நம்பியே வாழ வேண்டும் என்பதையே இந்த விவகாரம் உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








