மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ்... இந்தியர்களுக்கு சொகுசை ஊட்டிய முதல் மாடல்!
இந்தியாவில் சொகுசு கார் என்ற நாமதேயத்தை முதலில் அறிமுகம் செய்த நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ். ஆம், கடந்த 1995ம் ஆண்டு முதல் மாடலாக தனது இ க்ளாஸ் சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்து சொகுசு கார் மார்க்கெட்டின் முன்னோடி என்ற பெருமையை மெர்சிடிஸ் பென்ஸ் பெற்றது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், சமீபத்தில் இ க்ளாஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்றையும் இ க்ளாஸ் இ எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்தது.
இந்த நிகழ்ச்சியை டிரைவ்ஸ்பார்க் தளம் நேரடியாக கவரேஜ் செய்து தகவல்களை வழங்கியதை அறிவீர்கள். மேலும், இதே நிகழ்ச்சியில் இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அனைத்து தலைமுறை இ க்ளாஸ் கார் மாடல்களையும் காட்சிக்கு வைத்திருந்தது பென்ஸ். இந்தநிலையில், அனைத்து மாடல்களின் சிறப்பம்சங்கள், சுவாரஸ்யங்களை வாசகர்களுடன் இந்த செய்தித் தொகுப்பின் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம்.

முதல் தலைமுறை
கடந்த 1995ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் W124 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த காரின் ஒரு முக்கிய விஷயத்தை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த காரின் ஹெட்லைட்டில் வைப்பர் பிளேடுகள் கொடுக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது. வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்திய விஷயங்களில் இதுவும் ஒன்று.

இரண்டாம் தலைமுறை
1997ம் ஆண்டு இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் W210 Series என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டது. முதல்தலைமுறை மாடலைவிட டிசைனிலும், சிறப்பம்சங்களிலும் பல்வேறு மாறுதல்களை பெற்றது. ஆம், இந்த காரின் முட்டை வடிவ இரட்டை ஹெட்லைட்டுகள், அந்த காலத்தில் மிக புதுமையான டிசைன் அம்சமாக பார்க்கப்பட்டது. அத்துடன், நீளமான வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டதால், அதிக இடவசதியுடன் வந்தது. அந்த நேரத்தில் உலகின் அதிகம் விற்பனையான சொகுசு கார் மாடல் என்ற பெருமையையும் இது பெற்றிருந்தது.

மூன்றாம் தலைமுறை மாடல்
2002ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் W211 Series என்ற பெயரில் அழைக்கப்பட்டது. முந்தைய தலைமுறை மாடலலிருந்து மிகவும் நேர்த்தியாக புதிய தலைமுறை மாடலாக டிசைன் மாற்றங்களையும், சொகுசு வசதிகளையும் பெற்றது. இந்த காரில் பை ஸினான் ஹெட்லைட்டுகளும், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதியும் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதிகள் இந்தியர்களுக்கு புதிது.

நான்காம் தலைமுறை மாடல்
கடந்த 2009ம் ஆண்டு நான்காம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடல் W212 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டது. இந்த காரில் பகல்நேர எல்இடி விளக்குகள் கொடுக்ப்பட்டிருந்தது. அத்துடன், மிக நேர்த்தியும், நவ நாகரீமும் கொண்ட டிசைனில் வெளிவந்தததால், விற்பனையும் ஜி்வ்வென்று உயர்ந்தது. இரண்டு ஹெட்லைட்டுகளும், அதற்கு துணையாக சிறிய ஹெட்லைட்டுகள் இரண்டும் இந்த காரில் இடம்பெற்றிருந்தது. க்ரில் அமைப்பும் முக்கிய மாற்றத்தை சந்தித்தது.

ஐந்தாம் தலைமுறை
உலக அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு ஐந்தாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் W213 Series என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த காரின் மிக முக்கியமான அம்சம், ஆட்டோனாமஸ் டிரைவிங் எனப்படும் ஓட்டுனரின் உதவியில்லாமல் தானியங்கி முறையில் காரை செலுத்தும் தொழில்நுட்பம்தான். நெடுஞ்சாலைகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக மணிக்கு 209 கிமீ வேகம் வரையிலும் தானியங்கி முறையில் செல்லும் வசதி கொண்டது. அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதிகம் விற்பனையான சொகுசு கார்
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சொகுசு கார் மாடல்களில் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார் முன்னிலை வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 32,000க்கும் அதிகமான மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. சொகுசு, இடவசதி, தொழில்நுட்பம் என பல்வேறு விதத்திலும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications








