விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 கார்கள்... பட்டியலில் மாருதியின் ராஜாங்கம்!
இந்த புத்தாண்டு கார் நிறுவனங்களுக்கு மிதமான வளர்ச்சியுடன் துவங்கியிருக்கிறது. வழக்கம்போல விற்பனையில் முதல் 10 இடங்களில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் 9 இடங்களை பிடித்துக் கொண்டுவிட்டன. மீதமுள்ள ஒரேயொரு இடத்தை கடும் சிரத்தையுடன் ஹோண்டா சிட்டி பெற்றிருக்கிறது.
பிற நிறுவனங்களுக்கு இடமளிக்காத வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனங்களான மாருதியும், ஹூண்டாயும் பட்டியலில் தொடர்ந்து ராஜாங்கம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜனவரி விற்பனையில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த அந்த 10 கார்களின் விபரங்கள் இதோ உங்களுக்காக...

10. ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் விஸ்வரூபம் தொடர்கிறது. கடந்த மாதம் 6,589 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளன. டிசைன், வசதிகள், எஞ்சின் ஆப்ஷன்கள், விலை என அனைத்திலும் தன்னிறவை தருவதால், விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது.

09. மாருதி செலிரியோ
ஹூண்டாய் க்ரெட்டா போன்றே, மாருதி செலிரியோ காரும் விற்பனையில் 6,589 என்ற அதே எண்ணிக்கையை பதிவு செய்து 9வது இடத்தை பெற்றுள்ளது. குறைவான விலை டீசல் மாடல், ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல், குறைந்த பராமரிப்பு செலவு, பட்ஜெட் விலை என வாடிக்கையாளர்களை வளைத்து போட்டு வருகிறது.

08. மாருதி பலேனோ
மாருதி நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக் காராக வந்து டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. கடந்த மாதம் 7,698 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், விலை, வசதிகள், மாருதி பிராண்டு போன்றவை இந்த காருக்கான பக்கபலமான அம்சங்கள்.

07. ஹோண்டா சிட்டி
தப்பு முதல் போன்று இந்த பட்டியலில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் 8வது இடத்தை ஹோண்டா சிட்டி கார் பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 8,037 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன், தரம், சிறப்பான எஞ்சின், மைலேஜ் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை வசீகரித்து மிட்சைஸ் செக்மென்ட்டில் நம்பர்-1 மாடலாக வலம் வருகிறது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20
கடந்த மாதம் மாருதி பலேனோ காரை விற்பனையில் முந்தியுள்ளது ஹூண்டாய் எலைட் ஐ20 கார். கடந்த மாதத்தில் 9,604 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. எலைட் ஐ20 காரின் டிசைன் மற்றும் வசதிகள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருவதுடன் ஓர் சிறப்பான விற்பனையை ஹூண்டாய் நிறுவனத்துக்கு நிலையாக வழங்கி வருகிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
பட்ஜெட் விலையில் ஓர் பிரிமியம் மாடலாக கருதப்படும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பட்டியலில் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதம் 9,934 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

04. மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் கார் தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதம் 12,744 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த பராமரிப்பு, அடக்கமான வடிவமைப்பு, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல், சிறந்த மைலேஜ் போன்றவை இந்த காருக்கான பக்கபலம். உயரமானவர்களும் ஓட்டுவதற்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் மாடலாக இருக்கிறது.

03. மாருதி ஸ்விஃப்ட்
மாருதி பலேனோவின் வருகை ஸ்விஃப்ட் மார்க்கெட்டை சிறிது பாதித்திருப்பது மாதா மாதம் விற்பனை எண்ணிக்கையின் மூலமாக புலனாகிறது. கடந்த மாதம் 14,057 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது மோசமான விற்பனை எண்ணிக்கை இல்லாயெனினும், பங்காளியால் மாதத்திற்கு சராசரியாக 3,000 எண்ணிக்கையை ஸ்விஃப்ட் இழந்து நிற்கிறது. இருந்தாலும், தனது டிசைன், கையாளுமை, மைலேஜ், குறைந்த பராமரிப்பு போன்றவற்றால் வாடிக்கையாளர்களின் வரவேற்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

02. மாருதி டிசையர்
கடந்த மாதம் 17,587 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. குறைந்த பராமரிப்பு கொண்ட செடான் கார் மாடலாக இருப்பதும், மைலேஜ், இடவசதியில் போதிய நிறைவை தருவதும் வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

01. மாருதி ஆல்ட்டோ
ரெனோ க்விட் கார் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும், மாருதி ஆல்ட்டோவின் விற்பனைக் கோட்டையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 21,462 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சிறிய கார்களுக்கு சர்வீஸ் நெட்வொர்க் மிக முக்கியம் என்று ரெனோ வருகை குறித்து மாருதி தலைவர் பர்கவா கூறியதை உண்மையாக்கும் விதத்தில் விற்பனை தொடர்ந்து சக்கை போடு போட்டு வருகிறது. குறைந்த விலையில், குறைவான பராமரிப்பு செலவு கொண்ட பட்ஜெட் கார் என்பதுடன், மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவை வாடிக்கையாளர்களை எந்த பக்கமும் திரும்ப விடவில்லை என்பது இந்த விற்பனை எண்ணிக்கை மூலமாக புலனாகிறது.

ரெனோ க்விட் விற்பனை
இந்த பட்டியலை படிக்கும் பலருக்கும் கிட்டத்தட்ட 90,000 முன்பதிவுகளை பெற்ற ரெனோ க்விட் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்ற ஆவலில் பட்டியலை திறந்திருப்பர். ஆனால்,கடந்த மாதம் 11வது இடத்தையே ரெனோ க்விட் பெற்றது. கடந்த மாதத்தில் 5,985 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. ரெனோ க்விட் வருகை மாருதி ஆல்ட்டோவை பாதிக்கப்படவில்லை என்றாலும், ஹூண்டாய் இயான் காரின் விற்பனையில் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கடந்த மாதம் 500 என்ற எண்ணிக்கை வித்தியாசத்தில் ஹூண்டாய் இயான் காரை விற்பனையில் முந்தியிருக்கிறது ரெனோ க்விட்.


Click it and Unblock the Notifications








