விரைவில் எதிர்பார்க்கப்படும் டாப் - 5 ஏஎம்டி கியர்பாக்ஸ் கார்கள்!

Written By:

ஓட்டுவதற்கு எளிதாக ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட கார்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் டாப் 5 ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. ரெனோ க்விட் ஏஎம்டி

ரெனோ க்விட் காருக்கான வரவேற்பு அறிந்ததே. சமீபத்தில் ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே வந்து ஏமாற்றம் தந்தது.

ஆனால், தற்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் இந்த வாரத்தில் விற்பனைக்கு வருகிறது. ரெனோ க்விட் ஏஎம்டி மாடலின் முக்கிய விசேஷம், கியர் மாற்றுவதற்கான அமைப்பு கியர் நாப் என்று சொல்லக்கூடிய திருகு அமைப்பில் வருகிறது. இது சென்டர் கன்சோலுக்கு கீழே வருவதால் கியர் லிவர் உள்ள பகுதியில் இடவசதி கூடுதலாக கிடைக்கும்.

02. டட்சன் ரெடிகோ ஏஎம்டி

இந்தியாவில் மிக குறைவான விலை கொண்ட கார்களில் டட்சன் ரெடிகோ காரும் ஒன்று. அர்பன் கிராஸ்ஓவர் என்ற ரகத்தில் அழைக்கப்படும் சற்று வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டாடா நானோ காரைவிட சற்றே விலை அதிகம் கொண்ட கார் என்பதும் பட்ஜெட் கார் வாங்க விரும்புவோரின் முதல் சாய்ஸாக உள்ளது.

ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள தருவாயில், அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட டட்சன் ரெடிகோ காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதியில், அதாவது மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. டாடா டியாகோ

டாடா மோட்டார்ஸ் நிறுவனமே எதிர்பார்க்காத அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது டியாகோ கார். டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

விரைவில் டாடா டியாகோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டாடா ஸெஸ்ட், நானோ கார்களில் இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் விற்பனையில் இருக்கும் நிலையில், அடுத்து டாடா டியாகோவில்தான் இந்த ஏஎம்டி மாடல் கொண்டதாக வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் டாடா டியாகோ காரின் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகமாகும் என்று தெரிகிறது.

04. மாருதி பிரெஸ்ஸா

மாருதி விட்டார பிரெஸ்ஸா எஸ்யூவி காருக்கான வரவேற்பு தெரிந்ததே. மாருதியின் நம்பகத்தன்மையால் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் கிடைக்கும் மாடலாகவும் பெயர் பெற்றிருக்கிறது.

தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு முதல் அரையாண்டு காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

05. ரெனோ லாட்ஜி

விற்பனையில் எதிர்பார்த்த அளவு சோபிக்காத ரெனோ லாட்ஜி காருக்கு புதிய உத்வேகம் கொடுக்க ரெனோ முடிவு செய்திருக்கிறது. தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியும், அதன் ரீபேட்ஜ் மாடலான நிசான் டெரானோ எஸ்யூவியும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களில் வந்துவிட்டன.

அடுத்து, ரெனோ லாட்ஜி காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி அளிக்க ரெனோ கார் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. எம்பிவி கார்களில் இந்த வசதியை பெறும் முதல் மாடலாக வருவதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும். அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Top 5 Upcoming AMT Cars in India.
Story first published: Monday, November 7, 2016, 15:01 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos