இந்தோனேஷியாவில் குட்டி இன்னோவாவை காரை களமிறக்கும் டொயோட்டா!
புதிய 7 சீட்டர் மினி எம்பிவி கார் மாடலை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தோனேஷியாவில் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய மினி எம்பிவி கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
டட்சன் கோ ப்ளஸ் காரின் ரகத்தில் இணைய இருக்கும் இந்த புதிய டொயோட்டா எம்பிவி காரின் ஸ்பை படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றன. அவற்றை உங்கள் பார்வைக்கு வழங்குவதுடன், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மினி எம்பிவி
இந்தோனேஷியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார் மாடலான டொயோட்டா அவன்ஸா காரைவிட குறைவான விலையில் இந்த கார் வர இருக்கிறது. மேலும், டொயோட்டா கல்யா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கல்யா என்பது சமஸ்கிருதத்தில் குறையற்ற என்று பொருள்படுகிறதாம்.

பிளாட்ஃபார்ம்
டைகட்சூ அயிலாவின் ரீபேட்ஜ் மாடலான டொயோட்டா அகியா என்ற ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான மினி எம்பிவி கார் மாடலாக டொயோட்டா கல்யா உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், பக்கவாட்டிலும், பின்புறத்தில் டெயில் லைட்டுகளும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டிசைனை ஒத்திருக்கிறது.

இருக்கை வசதி
டட்சன் கோ ப்ளஸ் கார் போன்றே சிறிய வகை எம்பிவி காராக வரும் இந்த காரும் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் வருகிறது. எனவே, போட்டியாளர்களுக்கு இந்த மாடல் நிச்சயம் கடும் போட்டியை கொடுக்கும்.

குட்டி இன்னோவா
குட்டி இன்னோவா மாடலாக வர இருக்கும் இந்த புதிய எம்பிவி காரில் டொயோட்டா எட்டியோஸ் குடும்ப கார்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும். மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வர இருக்கிறது. இந்தியாவில் வரும்போது எட்டியோஸ் கார்களில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சினுடன் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது.

மைலேஜ்
இந்தோனேஷிய அரசின் விதிகளின்படி, 980சிசி முதல் 1,200சிசி வரையிலான பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படும் கார்கள் குறைந்தபட்சம் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தர வேண்டும். எனவே, இந்த கார் மிகச்சிறப்பான மைலேஜை வழங்கும் என்று கூறலாம்.

தயாரிப்பு
இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் இந்த காருக்கான பெரும்பாலான உதிரிபாகங்கள், அந்நாட்டை சேர்ந்த உள்ளூர் சப்ளையர்களிடமிருந்தே பெறப்பட உள்ளது. எனவே, மிக சவாலான விலையில் அங்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு...
பொதுவாக இந்தோனேஷிய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் பெரும்பாலான ஜப்பானிய கார்கள் இந்தியாவிலும் அடுத்து வருவது வழக்கமான ஒன்று. எனவே, இந்த குட்டி இன்னோவா கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இன்னோவா விலைக்கு ஈடுகொடுக்க முடியாத இந்தியர்களுக்கு இது மிகச்சிறந்த சாய்ஸாக அமையும்.
Image courtesy: Auto Bild And Otomania


Click it and Unblock the Notifications








