கார் வாங்கும்போது திருப்திகரமான சேவையை வழங்குவதில் டொயோட்டா முதலிடம்!
கார் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு போதிய தகவல்களை அளித்துடன், கார் வாங்கும் நடைமுறையை மிக எளிமையாகவும், திருப்திகரமாகவும் சேவையை வழங்குவதில் டொயோட்டா நிறுவனம் முதன்மையாக விளங்குவதாக ஜேடி பவர் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கார் வாங்கும் நடைமுறையை துவங்குவதல், டீலரில் உள்ள வசதிகள், ஒப்பந்தம் மற்றும் ஆவணங்கள் கையாளுதல், டெலிவிரி தரும் காலம், விற்பனை பிரதிநிதி தரும் தகவல்களின் தன்மை மற்றும் டெலிவிரி வழங்கும் நடைமுறைகள் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை புதிய கார் வாங்கிய 7,604 வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தந்த மதிப்பீடுகள் 1,000 புள்ளிகளை அதிகபட்சமாக கொண்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், சொகுசு கார் நிறுவனங்களை தவிர்த்து, இந்தியாவில் செயல்படும் 12 கார் நிறுவனங்கள் புள்ளிகளை வைத்து பட்டியலிடப்பட்டன. அதில், அதிக புள்ளிகளை பெற்று டொயோட்டா முதலிடம் பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்று எந்த இடத்தில் உள்ளன என்பதை தொடர்ந்து காணலாம்.

01. டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் 1000 புள்ளிகளுக்கு 838 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர் திருப்தியில் மட்டுமல்ல, நம்பகமான கார்களை தயாரிப்பதிலும் டொயோட்டாவுக்கு நன்மதிப்பு இருக்கிறது.

02. நிசான்
விற்பனையில் இந்தியாவின் பின்தங்கிய நிலைில் இருந்தாலும், இந்த பட்டியலில் நிசான் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நிசான் நிறுவனம் 831 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதாவது, நிசானுக்கும், டொயோட்டாவுக்கும் இடையில் குறைந்த புள்ளிகள் வித்தியாசம்தான்.

03. ஹோண்டா கார்
தரத்தில் மட்டுமல்ல, வாடிக்கையாளர் சேவையிலும் ஹோண்டா கார் நிறுவனம் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றிருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹோண்டா கார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் 815 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

04. ஹூண்டாய்
இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் 4வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனமமும் 815 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

05. மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனமும் 815 புள்ளிகளை பெற்றிருக்கிறது. சிறிய வித்தியாசத்தில் ஹோண்டா, மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

06. டாடா மோட்டார்ஸ்
விற்பனைக்கு பிந்தைய சேவையில் வாடிக்கையாளர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாலும், கார் வாங்கும்போது திருப்திகரமான சேவையை அளிக்கும் நிறுவனங்களில் முக்கிய இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் 813 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

07. ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் அதிகபட்சமான 1,000 புள்ளிகளில் 807 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

08. மாருதி சுஸுகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி விற்பனைக்கு பிந்தைய சேவையில் சிறந்து விளங்கினாலும், கார் வாங்கும்போதான நடைமுறையில் வாடிக்கையாளர்களிடத்தில் திருப்தியை பெறுவதில் போட்டியாளர்களைவிட சற்று பின்தங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் 804 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

09. டட்சன்
டட்சன் பிராண்டு 803 புள்ளிகளுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை தருவதில் சற்று பின்தங்கியே உள்ளது.

10. செவர்லே
அமெரிக்காவின் செவர்லே பிராண்டு 802 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. விற்பனையின்போதும், விற்பனைக்கு பின்னும் சேவை தரத்தை வெகுவாக மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

11. ஃபோர்டு
இந்த விஷயத்தில் செவர்லே போன்றே மற்றொரு அமெரிக்க பிராண்டான ஃபோர்டும் கடைசியில் உள்ளது. அதிகபட்சமான 1,000 புள்ளிகளுக்கு 799 புள்ளிகளையே ஃபோர்டு பெற்றிருக்கிறது.

12. ரெனோ
ரெனோ கார் நிறுவனம் 778 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது. விற்பனைக்கு பிந்தைய சேவைகளை மேம்படுத்துவதை போன்றே, கார் வாங்கும் நடைமுறையையும் செம்மை படுத்த வேண்டியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








