விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் எஸ்யூவி கார்கள் - ஒரு பார்வை!
ஸ்போர்ட் யுடிலிட்டி வெய்க்கிள் எனப்படும் எஸ்யூவி மாடல் கார்களுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். அதற்கென ஓர் தனி ஆடியன்ஸ் கூட்டமே இருக்கிறது. சாலையில் இன்றைக்கு நாம் பார்க்கும் கார்களில் பாதிக்குப் பாதி எஸ்யூவி மாடலாக இருப்பதே, அதன் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்புக்கு ஓர் உதாரணம்.
இந்திய மார்க்கெட்டைக் குறிவைத்து ஆண்டுதோறும் சர்வேதச நாடுகளைச் சேர்ந்த பல முன்னணி கார் நிறுவனங்கள், தங்களது புதிய எஸ்யூவி மாடல்களை இங்கு களமிறக்கி வருகின்றன. அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. அடுத்த சில மாதங்களுக்குள் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் எஸ்யூவி கார்கள் பற்றிய விவரங்கள் இதோ உங்களுக்காக...

டாடா ஹெக்ஸா
டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்போகும் புதிய மாடல் இது. டிசைனைப் பொருத்தவரை ஹெக்ஸாவில் நேர்த்தியான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி மாடலைப் போன்று வெளிப்புறத் தோற்றம் உள்ளது. அதேவேளையில் எம்யூவி ரகத்தில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்புறத்தைப் பார்க்கும்போது ப்ரீமியம் லுக் கிடைக்கிறது. இருக்கைகள் மற்றும் டேஷ் போர்டு ஆகியவை லெதர் ஃபினி்ஷ் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடன் ஈர்க்கும் வகையிலான நேர்த்தியான இண்டீரியர் டிசைன் ஹெக்ஸாவில் உள்ளது. 2.2 லிட்டர் வேரிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 154 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட எஞ்சின் இது. 6 கியர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கியர் வசதியும் உண்டு.
இந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை - ரூ.13 லட்சம் - ரூ.18 லட்சம்.

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்
ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான டொயோட்டாவின் ஹிட்டான மாடல்களில் ஒன்று ஃபார்ட்ச்யூனர். டொயோட்டா வட்டாரத்திலிருந்து டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்த தகவலின்படி, புதிய தலைமுறை மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது. முதலில் பெட்ரோல் மாடலில் வருகிறது.
இதில் 2.7 லிட்டர் திறனுள்ள 4 சிலிண்டர் விவிடி - ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 162 பிஎச்பி முறுக்கு விசை மற்றும் 245 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 5 மேனுவல் கியர்கள் மற்றும் 6 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
அதே போல் மேம்படுத்தப்பட்ட ஃபார்ட்ச்யூனர் காரில், டீசல் எஞ்சினிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2.4 லிட்டர் ஜிடி எஞ்சின் மற்றும் 2.8 லிட்டர் எஞ்சின்கள் அதில் பொருத்தப்படலாம் எனத் தெரிகிறது.
விலை - ரூ.28 லட்சம் - ரூ.32 லட்சம்

ஹுண்டாய் டூஸான்
க்ரெட்டா மற்றும் சாண்டா ஆகிய இரு மாடல்களுக்கு இடைப்பட்ட ரகமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டகாசமான வடிவமைப்புடன் கூடிய மாடலாக இது வரவுள்ளது.
இண்டீரியரிலும் லெதர் சீட்கள், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சர்ரவுண்ட் சிஸ்டம், ஆப்ஷனல் பனோரமிக் கண்ணாடி மேற்கூரை, தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் உள்ளன.
ஸ்டீயரிங் வீல்கள் உள்ளிட்டவை உயர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர அவசரகால பிரேக் வசதி, பாதையை விட்டு விலகாமல் இருப்பதற்கு அதுதொடர்பான தகவல்களை அலெர்ட் செய்யும் வசதி (லேன் கீப்பிங் அசிஸ்ட்) உள்ளிட்டவையும் டூஸான் எஸ்யூவியில் உள்ளன.
2.0 லிட்டர் திறன் கொண்ட இரு வகையான எஞ்சின்கள் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவை முறையே 134 பிஎச்பி மற்றும் 181 பிஎச்பி திறனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மொத்தம் 6 கியர்கள் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் உள்ளது.
இந்த ஆண்டு அக்டோபரில் இந்த மாடல் வெளியாகலாம்.
விலை - ரூ. 18 லட்சம் - ரூ.22 லட்சம்

ஜாகுவார் எஃப் பேஸ்
கார்களின் மன்னனாக விளங்கும் ஜாகுவார், எஃப் - பேஸ் எஸ்யூவி மாடலை இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. 2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட எஃப் பேஸ் மாடலில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
177.5 பிஎச்பி மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட எஞ்சின் அது. 6 கியர் மேனுவல் ஆப்ஷனும், 8 கியர் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் கொண்டுள்ளது.
காரை எடுத்தவுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தை 8.7 விநாடிகளில் எட்டிவிடும் திறன் உடைய எஞ்சின் இது. அதிகபட்ச வேகம் மணிக்கு 208 கிலோ மீட்டராகும்.
சாலைக்கும், காரின் அடித்தளத்துக்கும் இடேயான இடைவெளி, அதாவது கிரவுண்ட் கிளியரன்ஸ் 213 மில்லி மீட்டராக உள்ளது.
4,731 மி.மீ நீளமும், 1,936 மி.மீ அகலமும், 1,652 மி.மீ உயரமும் கொண்டது ஜாகுவார் எஃப்-பேஸ் கார்.
விலை - ரூ.75 லட்சம் - ரூ.90 லட்சம்

ஜீப் கிராண்ட் செரோக்கி மற்றும் ரேங்க்லர்
ஃபியட் கிறைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவைச் சேர்ந்த அல்ட்ரா கிளாசிக் கார் தயாரிப்பு நிறுவனம் ஜீ்ப். ஆட்டோ மொபைல் துறையில் பெரும்பாலானோரால் நேசிக்கப்படும் பிராண்டுகளில் அதுவும் ஒன்று.
அதன் கிளாஸான லுக், ப்ரீயமான ஸ்டைல் மற்றும் தன்னிகரற்ற பெயர் ஆகியவையே ஜீப் நிறுவனத்தின் மீதான மதிப்புக்குக் காரணம். அந்த நிறுவனம், கிராண்ட் செரோக்கி மற்றும் ரேங்க்லர் ஆகிய இரு எஸ்யூவி மாடல்களை இந்த மாதம் 31-ஆம் தேதி அறிமுகப்படுத்தப் போகிறது.
கிராண்ட் செரோக்கி மாடலைப் பொருத்தவரை 6.4 லிட்டர் ஹெமி வி - 8 எஞ்சின் மாடலாக அது மார்க்கெட்டுக்கு வரவுள்ளது. அந்த எஞ்சின் 475 பிஎச்பி சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 கியர்கள் ஆட்டோமேடிக் ஆப்ஷனில் வழங்கப்பட்டுள்ளன.
ரேங்க்லர் மாடல் காரானது 198 பிஎச்பி சக்தியையும், 460 என்எம் டார்க்கை உற்பத்தித் திறன் கொண்ட 2.8 லிட்டர் டீசல் எஞ்சினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 கியர்கள் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் உள்ளது.
விலை - கிராண்ட் செரோக்கி ரூ.65 லட்சம், ரேங்கலர் அன்லிமிடெட் - ரூ.30 லட்சம்.

மிட்சுபிஸி பஜேரோ ஸ்போர்ட் - ஃபேஸ் லிப்ட்
பஜேரோ எஸ்யூவி மாடலுக்கு கணிசமான வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. எஸ்யூவி மாடல்களில் அறிமுகமான பழைய மாடல்களில் இதுவும் ஒன்று. கடந்த 2014-ஆம் ஆண்டு கடைசியாக மெருகூட்டப்பட்ட பஜேரோ ஸ்போர்ட் மாடல் அறிமுகமானது. அதன் பிறகு அந்த கார் மேம்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், ஃபேஸ் லிப்ட் செய்யப்பட்ட புதிய மிட்சுபிஸி பஜேரோ ஸ்போர்ட் இந்த ஆண்டு நவம்பருக்குள் களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2.4 லிட்டர் எம்ஐவிஇசி டர்போ டீசல் எஞ்சின் இதில் பொருத்தப்படவுள்ளது.
அது 150 பிஎச்பி முறுக்கு விசையை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகத் தெரிகிறது. மொத்தம் 8 கியர்கள் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படவுள்ளன.
விலை - ரூ. 22 லட்சம் - ரூ.26 லட்சம்

டாடா நெக்ஸான்
காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் பக்கா ஸ்போர்டிவான வடிவமைப்புடன் நெக்ஸானைக் களமிறக்க உள்ளது டாடா நிறுவனம். ஸ்டைலான முகப்பு விளக்குகள் (ஹெட் லேம்ப்) மற்றும் பின்புற விளக்குள் (டெய்ல் லேம்ப்) இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரீமியம், ஸ்போர்டி மற்றும் இடவசதி ஆகியவற்றுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போதுமே முக்கியத்துவம் அளிக்கும். அந்த வகையில் பார்த்தால், நெக்ஸான் மாடலிலும் அத்தகைய சிறப்பம்சங்கள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என இருவேறு மாடல்களில் அந்த கார் மார்க்கெட்டுக்கு வரவுள்ளது. மொத்தம் 5 கியர்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷனுடன் வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு டிசம்பருக்குள் நெக்ஸான் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
விலை ரூ. 6 லட்சம் - ரூ.10 லட்சம்

நிஸான் எக்ஸ் ட்ரையல் ஹைபிரிட்
ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான நிஸான் எக்ஸ் ட்ரையலின் மேம்படுத்தப்பட்ட புதிய காம்பேக்ட் எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.
வீல்பேஸ், இண்டீரியர் லுக், வெளிப்புறத் தோற்றம் ஆகியவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 32 கிலோ வாட் எலெக்ட்ரிக் எஞ்சின் ஆகிய இரு மாடல்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
விலை - ரூ.30 லட்சம் - ரூ.35 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்
இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய எஸ்யூவி மாடலான டிகுவான் காரை அறிமுகப்படுத்துவதாகத் திட்டமிட்டுள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்ட போதே அந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
சர்வதேச சந்தையில் டிகுவான் மாடல் கணிசமான விற்பனையைப் பெற்றிருந்தாலும், இந்தியாவில் மார்க்கெட் நிலவரம் எப்படி? என்பது குறித்து முழுமையாக ஆராய்வதற்காகவே அந்த மாடலை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தாமல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் காலந்தாழ்த்தி வருகிறது.
அவசரகால பிரேக் வசதி, பாதையை விட்டு விலகாமல் இருப்பதற்கு அதுதொடர்பான தகவல்களை அலெர்ட் செய்யும் வசதி (லேன் கீப்பிங் அசிஸ்ட்), பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான ஜீப்ரா கிராஸிங்கை மானிட்டர் செய்யும் வசதி உள்ளிட்டவை இந்த மாடலில் உள்ளன.
2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் இதில் உள்ளது. 147 பிஎச்பி முறுக்கு விசையை அது உற்பத்தி செய்யும். 6 கியர்கள் கொண்ட மேனுவல் ஆப்ஷன் மற்றும் 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள் என இரண்டு சாய்ஸ்கள் டிகுவான் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை - ரூ.30 லட்சம் - ரூ.35 லட்சம்

ஸ்கோடா கொடியாக்
செக் குடியரசைச் சேர்ந்த ஸ்கோடா கார் நிறுவனம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்தது ஸ்கோடா நிறுவனம். வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை இரு மடங்காக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்கோடா தெரிவித்தது.
அந்த இலக்கைப் பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய முயற்சிகளை அரங்கேற்றி வருகிறது அந்நிறுவனம். அதன் ஒரு பகுதியாக ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வெய்க்கிள எனப்படும் எஸ்யூவி மாடலில் 3 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஸ்கோடா நிறுவனம்.
அதில் ஒன்றுதான், 7 இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மாடலான கொடியாக். இந்த மாடலைப் பொருத்தவரை நிகழாண்டு அக்டோபரில் பாரீஸ் மோட்டார் ஷோவில் அது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு மத்தியில் மார்க்கெட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சன் என இருவேறு மாடல்களில் கொடியாக் கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 6 மேனுவல் கியர்கள் அல்லது 7 ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் அதில் கொடுக்கப்படவுள்ளன.
விலை - ரூ.30 லட்சம் முதல்...

இந்தத் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயனளித்திருக்கும் என நம்புகிறோம்... தொடர்ந்து இணைந்து இருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்....


Click it and Unblock the Notifications








