சர்ச்சைக்குள்ளான போதிலும் விற்பனையில் சாதனை படைத்த ஃபோக்ஸ்வேகன்...
சிம்புவின் பீப் சாங் போலவே, ஆட்டோ மொபைல் உலகில் பலத்த சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் ஃபோக்ஸ்வேகன். பல நாடுகளில் அந்நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றன.
இத்தனை சர்ச்சைகளுக்கு நடுவிலும் விற்பனையில் சாதனை படைத்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். அதுதான் ஆட்டோ மொபைல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக். சரி அப்படி என்ன விற்பனை செய்து விட்டது எனப் பார்த்தால் இந்த ஆண்டு முற்பாதியில் மட்டும் 51 லட்சம் வாகனங்களை டெலிவரி செய்துள்ளது அந்த நிறுவனம். இதன் மூலம் 1.5 சதவீத வளர்ச்சியையும் எட்டிப் பிடித்துள்ளது ஃபோக்ஸ்வேகன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடுமையான சோதனையில் சிக்கித் தவித்தது ஃபோக்ஸ்வேகன். அமெரிக்காவில் அந்நிறுவனத்தின் டீசல் கார்களை மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தியதில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்றொரு முகம் அந்த சோதனையில் வெளிப்பட்டது.
அதாவது, எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் ஃபோக்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பல்வேறு சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானது வோக்ஸ்வேகன் கார் நிறுவனம்.
மேலும், சர்வதேச அளவில் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.6 சதவீதம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இந்த கார்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டதுடன், அதுதொடர்பான வழக்கும் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.
அதில் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால், ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது ஃபோக்ஸ்வேகன். நிகழாண்டின் முதல் ஆறு மாதங்களில் டொயோட்டா நிறுவனம் 49 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஃபோக்ஸ்வேகனின் விற்பனையைக் காட்டிலும் 2 லட்சம் குறைவாகும்.
இதே வேகத்தில் சென்றால் ஃபோக்ஸ்வேகனின் கடந்த ஆண்டு விற்பனை அளவான 99 லட்சத்தை அந்நிறுவனம் தாண்டிவிடும் என நம்பப்படுகிறது. தடைகளை உடைத்து சரித்திரம் படைக்க காத்திருக்கிறது ஃபோக்ஸ்வேகன். அதற்கு முன்னால் டீசல் முறைகேடு சர்ச்சையையும், நீதிமன்ற விசாரணைகளையும் மக்கள் மறப்பார்களா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








