புதுப்பொலிவுடன் வால்வோ வி40 மற்றும் வி40 க்ராஸ் கன்ட்ரி கார்கள் அறிமுகம்!
புதுப்பொலிவுடன் வால்வோ வி40 மற்றும் வி40 க்ராஸ் கன்ட்ரி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வால்வோ வி40 மற்றும் வி40 க்ராஸ் கன்ட்ரி ஆகிய இரு மாடல்களும் அந்நிறுவனத்தின் குறைவான விலை மாடல்களாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, வால்வோ கார் பிரியர்களிடம் இந்த இரு மாடல்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், சந்தைப்போட்டியையும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் சமாளிக்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய வால்வோ வி40 மற்றும் வி40 க்ராஸ் கன்ட்ரி கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய வால்வோ வி40 மற்றும் வி40 க்ராஸ் கன்ட்ரி கார்கள் தலா இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இரண்டு கார்களின் க்ரில் மாற்றம் கண்டிருப்பதுடன், ஹெட்லைட்டில் சுத்தியல் போன்ற எல்இடி ஹெட்லைட்டுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில் இரண்டு கார்களிலும் பல வகையான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷன்களில் கிடைக்கும். இரட்டை வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டிருப்பதும் கவர்ச்சியாக இருக்கிறது. முன்புற இருக்கைகளை வசதிகேற்ப மாற்றம் செய்து அதனை மெமரியில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பனரோமிக் சன்ரூஃப் இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று.

வால்வோ வி40 மற்றும் வி40 க்ராஸ் கன்ட்ரி கார்களில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும். டாப் வேரியண்ட்டுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இரண்டு கார்களிலுமே 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கிறது. எஞ்சின் பவர் முன்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

வால்வோ கார்கள் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பானவை. அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. விபத்து நேர்ந்தால் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பெடஸ்ட்ரியன் ஏர்பேக்குடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் கார்களாகவும் சொல்லலாம்.

விலை விபரம்
வால்வோ வி40 விலை விபரம்
வி40 டி3 கைனெடிக்: ரூ.25.49 லட்சம்
வி40 டி3 ஆர்-டிசைன்: ரூ.28.53 லட்சம்
வால்வோ வி40 க்ராஸ் கன்ட்ரி விலை
டி4 மொமென்ட்டம்: ரூ.27.20
டி3 டிஸ்க்ரிப்ஷன்: ரூ.29.40 லட்சம்
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.


Click it and Unblock the Notifications








