ஃபோக்ஸ்வேகன் காம்பேக்ட் செடான் காரின் 'ஸ்பை' படங்கள்!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய காரை அந்த நிறுவனம் தீவிரமாக சாலை சோதனைகள் நடத்தி ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், புனே- மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் சாலை சோதனை நடத்தப்பட்ட அந்த காரின் ஸ்பை படங்களை ஓவர்ட்ரைவ் தளம் வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

புதிய மாடல்
ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் பின்புறத்தில் பூட்ரூமை சேர்த்து, காம்பேக்ட் செடான் காராக மாற்றியிருக்கின்றனர். இந்த புதிய மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

புதிய பெயர்
ஃபோக்ஸ்வேகனின் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் அமியோ என்ற பெயரில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

முதலீடு
ரூ.700 கோடி முதலீட்டில் இந்த புதிய காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகே சகனில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

டிசைன்
முகப்பு டிசைனும், இன்டீரியர் டிசைனும் போலோ காரை ஒத்திருக்கும். பின்புறத்தில் மட்டும் பூட் ரூம் சேர்ப்பதற்காக மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. மேலும், டெயில் லைட் க்ளஸ்ட்டர் கூட போலோ காரிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்
இந்த புதிய காம்பேக்ட் செடான் காரில் 75 பிஎஸ் பவரை அளிக்க வல்ல, 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 90 பிஎஸ் பவரை அளிக்க வல்ல 4 சிலிண்டர் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பவர்ஃபுல் மாடல்கள்
சாதாரண எஞ்சின் ஆப்ஷன்கள் மட்டுமின்றி, அதிக சக்தியை வழங்க வல்ல அமியோ ஜிடி டிஎஸ்ஐ பெட்ரோல் மாடலும், அமியோ ஜிடி டிடிஐ டீசல் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிடி மாடலின் சிறப்புகள்
இந்த மாடல்களில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் டீசல் ஜிடி மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வரும்.

எதிர்பார்க்கும் விலை
ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி
மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர் மற்றும் டாடா ஸெஸ்ட் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








